சபரிமலை ஐயப்பன் கோயில் நடை விஷூ பண்டிகை, சித்திரை மாத பூஜைக்களுக்காக இன்று திறக்கப்படுகிறது. மாலை நடைபெறும் தீபாரதனையில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை. நாளை வழக்கம் போல் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நெய்யபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, கலசாபிஷேகம், சகஸ்ர கலச பூஜை, படி பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
தொடர்ந்து வரும் ஏப்ரல் 14ஆம்தேதி நடைபெறும் விஷூ பண்டிகை, ஏப்ரல் 18ஆம் தேதி வரை சித்திரை மாத சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்றைய தினம் இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படும்.
பக்தர்களுக்கான கட்டுப்பாடுகள்
நாளை முதல் 18ஆம் தேதி வரை நாள்தோறும் 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள். கரோனா பரவல் காரணமாக சபரிமலையில் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அனைத்து பக்தர்களுக்கும் கரோனா பாசோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள்
ரயில்கள் மூலம் வரும் பக்தர்களின் வசதிக்காக கோட்டயம், திருவல்லா, செங்கன்னூர், கொல்லம், கொட்டாரக்கரை, புனலூர் ஆகிய இடங்களில் இருந்து கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் சிறப்பு பேருந்துகள் நிலக்கல் வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தனம்திட்டையில் இருந்து பக்தர்களின் தேவைக்கு ஏற்றவாறு, பேருந்துகளை இயக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
முன்னதாக, பங்குனி மாத பூஜை, ஆராட்டு திருவிழாவையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, மார்ச் 14ஆந் தேதி திறக்கப்பட்டு 28ஆம் தேதி ஆராட்டு விழா நிறைவடைந்தவுடன் அன்று இரவு சாத்தப்பட்டது.