சிலுகுரி: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “திரிணாமுல் காங்கிரஸின் கடைசி ஆயுதம் வன்முறை என்று குற்றஞ்சாட்டினார். இது குறித்து அவர் கூறுகையில், “திரிணாமுல் காங்கிரஸ் வன்முறை அரசியலில் ஈடுபட்டுவருகிறது. திரிணாமுல் காங்கிரஸின் கடைசி ஆயுதம் வன்முறை, இந்த வன்முறை அரசியல் மே2ஆம் தேதியோடு முடிவுக்குவரும்” என்றார்.
முதல் கட்ட வாக்குப்பதிவில் 26 முதல் 30 தொகுதிகளில் வெல்வோம் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளாரே? என்ற கேள்விக்கு முதல் கட்ட வாக்குப்பதிவில் அனைத்து தொகுதிகளிலும் வெல்வோம் என்று அதிரடியாக பதிலளித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், “பல இடங்களில் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் முயன்றனர். இதனை பாஜகவினர் முறியடித்தனர். மக்கள் தங்களின் விருப்பங்களின்படி வாக்களித்துள்ளனர்.
மக்கள் வாக்கு பாஜகவுக்குதான். திரிணாமுல் குண்டர்களை பாஜக தொண்டர்கள் வெற்றிகரமாக தடுத்துவிட்டனர்” என்றனர். எனினும், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி நுஸ்ரத் ஜகான் குறித்து பதிலளிக்க மறுத்துவிட்டார். நுஜ்ரத் ஜஹான் கட்சி பேரணி ஒன்றில் கலந்துகொள்கையில் கோபபட்டதாக கூறப்படுகிறது. இதனை, அக்கட்சியின் உள்கட்சி பிரச்சினை என்றார் கைலாஷ் விஜய்வர்கியா.
மேற்கு வங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவின்போது 79.79 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. புரூலியா, ஜார்கிராம், பங்குரா, புர்பா மேதினாபூர், பாசிம் மேதினாபூர் உள்ளிட்ட 30 தொகுதிகளில் நடந்த வாக்குப்பதிவில் 191 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் 21 பேர் பெண்கள். 294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்தில் நிறைவு கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறுகிறது.
அதன்பின்னர், வாக்கு எண்ணிக்கை மே2ஆம் தேதி நடைபெறும். இந்திய தேர்தல் ஆணையம் அஸ்ஸாம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தலை பிப்ரவரி மாதம் அறிவித்தது. இதில் அஸ்ஸாமில் நான்கு கட்டங்களாவும், மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறுகின்றன. தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதையும் படிங்க: மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி, முதல்கட்ட வாக்குப்பதிவே சாட்சி- அர்ஜுன் முண்டா