விழுப்புரம் தொகுதி மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் புதுச்சேரி அண்ணாசிலை அருகே கண்டன ஆர்பாட்டம் நடத்தினர். இதில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்பாட்டத்தில் மத்திய அரசு எஸ்.சி.எஸ்.டி, ஓ.பி.சி மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்கி வந்த போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகையை மீண்டும் வழங்க வலியுறுத்தியும், டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து ரவிக்குமார் பேசுகையில், அம்பானி, அதானிக்கு தாரை வார்த்து கொடுப்பதற்காக மோடி அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பபெற டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றார்கள். அவர்களுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமிழ்நாடு, புதுச்சேரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து பொதுமக்களும் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்படும். இதை எதிர்த்து நீதிமன்றத்திற்கு கூட போக முடியாதபடி இந்த சட்டம் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதற்காக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் பாஜக அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்கள். நாட்டு மக்களின் நலனுக்காக விவசாயிகள் நடத்தும் அனைத்து போராட்டத்திலும் விடுதலைச் சிறுத்தைகள் பங்கேற்கும் என அவர் தெரிவித்தார்.