சித்ரதுர்கா : கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்ததும் இலவச மின்சாரம் வழங்குவதாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்ததாகக் கூறி, கிராம மக்கள் மின் கட்டணம் செலுத்த மறுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த மே 10ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. கடந்த 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், அதில் 135 இடங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது.
அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றிய போதிலும், முதலமைச்சரை தேர்வு செய்ய முடியாமல் ஆட்சி அமைப்பதில் காங்கிரஸ் கட்சி காலம் தாழ்த்தி வருகிறது. மே 18ஆம் தேதி ஆட்சி அமைக்க காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததால், இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்தது.
தேர்தல் முடிந்து காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதால், சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மின்கட்டணம் செலுத்த மறுத்து வருகின்றனர். சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஜாலிகட்டே கிராமத்திற்கு வழக்கம்போல் மின் கணக்கு எடுக்கச் சென்ற ஊழியர்கள், மின் கட்டணத்தை செலுத்துமாறு கிராம மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
அதற்கு மறுப்புத் தெரிவித்த கிராம மக்கள் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் இலவச மின்சாரம் வழங்குவதாக வாக்குறுதி அளித்து உள்ளதாகக் கூறி மின் கட்டணத்தை செலுத்த மறுத்து உள்ளனர். தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற போதிலும் ஆட்சி இன்னும் அமையவில்லை என்று கூறிய ஊழியர்கள், தங்களுக்கு இலவச மின்சாரம் வழங்குவது தொடர்பாக எந்த உத்தரவும் வரவில்லை எனத் தெரிவித்து உள்ளனர்.
இருப்பினும், மின் கட்டணம் செலுத்த மறுத்த கிராம மக்கள், மற்றவர்களையும் செலுத்தக் கூடாது என அறிவுறுத்தும் வகையிலான காட்சி அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது. இது தொடர்பான வீடியோவை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட பாஜக ஐ.டி விங் தலைவர் அமித் மலவியா, சித்ரதுர்கா பகுதியைச் சேர்ந்த மக்கள் மின் கட்டணம் செலுத்த மறுத்து வருவதாகவும், மற்றவர்களையும் செலுத்த விடாமல் தடுத்து வருவதாகவும் கூறினார்.
விரைவில் காங்கிரஸ் கட்சி முதலமைச்சரை தேர்வு செய்து ஆட்சியை அமைக்காவிட்டால் மாநிலத்தில் பல்வேறு பிரச்னைகள் மற்றும் குழப்பங்கள் உருவாகக் கூடும் என்றும் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியின் போது காங்கிரஸ் கட்சி பல்வேறு இலவசங்களை அறிவித்ததாகவும், அதில் மூன்று முக்கிய இலவசங்களால் ஒதுக்கும் நிதியால் மாநில அரசுக்கு 58 ஆயிரம் கோடி ரூபாய் நிதிச்சுமை ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
அதேநேரம் பாஜக அறிவித்த இரண்டு முக்கிய இலவச அறிவிப்புகளால் மாநில அரசுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் நிதிச் சுமை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : வாய கொடுத்து மாட்டிக்கிட்டியே பங்கு! - அமிதாப் பச்சன், அனுஷ்கா மீது மும்பை போலீஸ் நடவடிக்கை!