புவனேஸ்வர்: காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பியுமான ஜெயந்தி பட்நாயக் வயது முதிர்வு காரணமாக நேற்று (செப்.28) காலமானார். அவருக்கு வயது 90. மறைந்த ஒடிஷா முன்னாள் முதல்வர் ஜே.பி. பட்நாயக்கின் மனைவியான ஜெயந்தி பட்நாயக், நான்கு முறை எம்.பியாக இருந்தவர்.
எழுத்தாளர், மூத்த அரசியல்வாதி என பன்முகங்களை கொண்டவர். தேசிய மகளிர் ஆணையத்தின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டவர். அவரது கணவர் ஜே.பி. பட்நாயக் கடந்த 2015ஆம் ஆண்டு காலமானார். அவருக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.
ஜெயந்தி பட்நாயக்கின் மறைவுக்கு ஒடிஷா ஆளுநர் கணேஷி லால் இரங்கல் தெரிவித்துள்ளார். இலக்கியத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பு காலத்தால் நினைவு கூறப்படும் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஒடிஷா காங்கிரஸ் தலைவர் சரத் பட்நாயக், ஒடிஷா காங்கிரஸ் முன்னாள் தலைவர் நிரஞ்சன் பட்நாயக் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: முன்னாள் பிசிசிஐ துணைத் தலைவர் நிரஞ்சன் ஷா வின் ஈடிவி பாரத்திற்கு சிறப்பு பேட்டி