டெல்லி : ராஜஸ்தான் முதலமைச்சர் தேர்வு குறித்து கட்சி மேலிடத்துடன் ஆலோசனை நடத்த முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே இன்று (டிச. 6) இரவு டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த நவம்பர் 25ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தின் 119 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில், டிசம்பர் 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் பாஜக 115 இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி 69 இடங்களில் மட்டும் வென்று ஆட்சியை தக்கவைக்க தவறியது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தின் முதலமைச்சரை தேர்வு செய்யும் பணியில் தொடர் இழுபறி நீடித்து வருகிறது. முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே, முதலமைச்சர் வேட்பாளர் ரேசில் முன்னணியில் உள்ளார். அதேநேரம், யோகி மகந்த் பாலக்நாத்திற்கும் பெருவாரியான அளவில் செல்வாக்கு இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் அவரும் முதலமைச்சர் ரேசில் குதித்ததால் போட்டி கடுமையாக காணப்படுகிறது. இந்நிலையில், முதலமைச்சர் வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்த பாஜக் தலைமையிடம் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜேவை டெல்லிக்கு அழைத்து உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. அதன் காரணமாக வசுந்தரா ராஜே இன்று (டிச. 6) இரவு விமானம் மூலம் டெல்லி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி செல்லும் வசுந்தரா ராஜே, நாளை(டிச. 7) பாஜக தலைமையிடம் மற்றும் கட்சி நாடளுமன்ற குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து சொந்த ஊர் வரும் வசுந்தரா ராஜே, தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
பாஜக நாடாளுமன்ற குழுவே அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்யும் அதிகாரம் பெற்று உள்ள நிலையில், விரைவில் ராஜஸ்தானுக்கு முதலமைச்சர் அறிவிக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது. இரண்டு முறை முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட வசுந்தரா ராஜே மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்படுவாரா என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க : ஜம்மு காஷ்மீர் திருத்த மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றம்! எதிர்க்கட்சிகள் எதிர்க்க என்ன காரணம்?