ஜம்மு (ஜம்மு & காஷ்மீர்): மக்களை மத்திய அரசு தவறான வழியில் நகர்த்திச் செல்வதாக உமர் அப்துல்லா குற்றஞ்சாட்டியுள்ளார்.
குப்கர் பிரகடனத்துக்கான மக்கள் கூட்டணியின் (பி.ஏ.ஜி.டி) கூட்டம் இன்று (நவ.7) நடைபெறவுள்ளது. முன்னதாக ஷெர்-இ-காஷ்மீர் பவனில் நிரம்பியிருந்த தேசிய மாநாட்டுக் கட்சி தொண்டர்களிடம் அதன் தலைவர் பரூக் அப்துல்லாவும், அவரது மகன் உமர் அப்துல்லாவும் உரையாற்றினர்.
அப்போது பேசிய உமர் அப்துல்லா, "2012 முதல் 2014 ஆம் ஆண்டுகளில், ஜம்முவில் எந்த இளைஞர்களும் ஆயுதங்களை நாடவில்லை. 2012-13 ஆண்டுகளை கணக்கிடுகையில், தற்போது தலைதூக்கும் தீவிரவாதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது" என்று கூறினார்.
ஒரு வருடத்தில் தங்களைத் தீவிரவாத செயல்களில் ஈடுபடுத்திக் கொண்ட இளைஞர்களின் எண்ணிக்கை அளவிற்கு, தற்போது ஒரே மாதத்தில் அதே அளவு இளைஞர்கள் தங்களை அது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுத்தி வருகின்றனர் என்னும் செய்தி மிகவும் வருந்தத்தக்கது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், 370, 35 ஏ சட்டப் பிரிவுகளை நீக்கியதும், ஜம்முவில் அமைதி நிலவும் என்று மத்திய அரசு தெரிவித்தது. ஆனால் நிலைமை என்னவோ தலைகீழாகத் தான் மாறியுள்ளது என்று கடுமையாக குற்றச்சாட்டினார்.
தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா கூறுகையில், “என் மக்களின் உரிமைகள் திருப்பித் தரப்படும் வரை நான் சாக மாட்டேன். மக்களுக்காக ஏதாவது செய்யவே நான் இங்கு வந்துள்ளேன். எனது வேலையை முடிக்கும் நாளில் தான் நான் இந்த உலகத்தை விட்டு வெளியேறுவேன்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரில் பிரதான அரசியல் கட்சிகளான தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவை, மாநிலத்தின் முந்தைய சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுப்பதற்காகவும், அது தொடர்பான உரையாடல்களைத் தொடங்குவதற்காகவும் அக்டோபர் மாதம் அனைத்து எதிர் கட்சிகளுக்கு இடையில் பி.ஏ.ஜி.டி என்ற கூட்டணியை அமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.