அல்மோரா: உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலின் இன்றைய பரப்புரையின்போது நரேந்திர மோடி உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில், "அனைவருடன் பிணைப்பு, அனைவருக்குமான வளர்ச்சி, அனைவரின் நம்பிக்கை, அனைவரது முயற்சி ஆகிய குறிக்கோள்களின் அடிப்படையிலேயே பாஜக அரசு செயல்படுகிறது" என்றார்.
ஆனால் எதிர்க்கட்சிகள் 'யாவரையும் பிரித்தல், கூட்டாகக் கொள்ளையடித்தல்' என்ற கொள்கையில் நம்பிக்கை வைத்துள்ளன என காங்கிரசை விமர்சித்தார் நரேந்திர மோடி. மேலும் அவர், "எந்தக் கட்சி (பாஜக) மக்களுக்கு வளர்ச்சிப் பணிகள், நலத்திட்டங்களைக் கொண்டுவருவதில் முனைப்புக் காட்டுகிறதோ அவர்களை வாக்காளர்கள் ஆதரிக்க வேண்டும்.
உத்தரகாண்டில் ரூ.17,000 மதிப்பிலான திட்டங்கள்
உத்தரப் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவின் மூலம், பாஜக மாபெரும் வெற்றிபெறும் எனத் தெளிவாகத் தெரிகிறது. இந்தத் தேர்தலில் பாஜகவை வெற்றிபெற வைக்க எங்களைவிட மக்கள் உறுதியுடன் இருக்கின்றனர். வாக்காளர்களின் நல்ல நோக்கம் ஒருபோதும் வீண்போகாது.
முந்தைய அரசு உத்தரகாண்ட் மாநில எல்லை கிராமங்கள், வட்டங்கள், மாவட்டங்களைக் கண்டுகொள்ளவில்லை. எல்லைப் பகுதியின் வளர்ச்சிக்கு பாஜக அரசு திட்டம் வகுத்துள்ளது. இந்த எல்லைப்புற கிராமங்களுக்காக நாங்கள் 'வைபிரண்ட் வில்லேஜ் (Vibrant Village)' என்ற திட்டத்தை வைத்துள்ளோம்.
இந்த தசாப்தம் உத்தரகாண்டுக்கானது, இந்த வாய்ப்பை மக்கள் நழுவவிட்டு விடக் கூடாது. 17 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் இந்த மாநிலத்தில் தொடங்கிவைக்கப்பட்டுள்ளன. உத்தரகாண்ட் தற்போது வளர்ச்சிப் பாதையில் முன்னேறிக்கொண்டிருக்கிறது. இந்த மாநிலம் புதிய அடையாளத்தைப் பெற்றுள்ளது.
பாஜகவின் தேவபூமி உத்தரகாண்ட்
பாஜகவால் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையிலும் வளர்ச்சியின் புதிய ஆற்றல் என வெளியிடப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மக்களிடம் ஆற்றல், நல்ல எண்ணம், நேர்மை இருப்பதை நான் காண்கிறேன்.
இந்த வரவு செலவுத் திட்ட அறிக்கையில், 'பர்வதமலைத் திட்டம்' மூலம் மலைப் பகுதிகளில் ரோப் வழித்தடங்களைக் கட்டமைக்க நாங்கள் முன்மொழிந்திருக்கிறோம். மேலும், நாங்கள் இந்த மாநிலத்தில் நவீன சாலை வழித்தடம், போக்குவரத்து உள்கட்டமைப்பு அமைக்கவுள்ளோம்.
எதிர்க்கட்சிகள் குமானுக்கும், கார்வாலுக்கும் இடையே பிளவை உண்டாக்க முயற்சித்தன. ஆனால் இரட்டை இன்ஜின் அரசு (பாஜக) இந்த இரண்டு இடங்களில் இரட்டைப் பணியை முடுக்கிவிட முயற்சித்தது. ஏனென்றால் பாஜகவுக்கு உத்தரகாண்ட் 'தேவபூமி'. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சுற்றுலாத் துறையில் வளர்ச்சி ஏற்படுத்தப்படும் என நான் உறுதியளிக்கின்றேன்" என்றார்.
இதையும் படிங்க: ஹிஜாப் விவகாரத்தை பெரியளவில் எடுக்க வேண்டாம் - உச்ச நீதிமன்றம்