லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் 3 நாட்கள் நடைபெறும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, "உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு துறைகளில், கடந்த சில ஆண்டுகளாக ரிலையன்ஸ் நிறுவனம் 50ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது.
இதன் அடுத்தகட்டமாக அடுத்த நான்கு ஆண்டுகளில் தொலைத்தொடர்பு, சில்லறை வர்த்தகம், புதுப்பிக்கத்தக்க தொழில்கள் ஆகிய துறைகளில் மேலும் 75,000 கோடி ரூபாயை ரிலையன்ஸ் நிறுவனம் முதலீடு செய்ய உள்ளது. இதன் மூலம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மேலும் ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்" என்றார்.
தொடர்ந்து பேசிய முகேஷ் அம்பானி, "நடப்பாண்டுக்குள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து நகரம் முதல் கிராமங்கள் வரை ஜியோ 5ஜி சேவை வழங்கப்படும். நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் இடையேயான இடைவெளி வெகுவாக குறைகிறது. மத்திய அரசின் தொலைநோக்கு பார்வையால் பிராந்திய ஏற்றத்தாழ்வுகள் மறைந்து வருகின்றன. இந்தியா வலுவான பாதையில் செல்கிறது. இதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட், இந்தியா ஒரு வளர்ந்த நாடாக உருவெடுக்கும் அடித்தளத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலை, ரயில்வே, விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்புகளை மேம்படுத்த, மூலதன செலவுகளுக்கு ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் செலவு, உள்நாட்டு உற்பத்தியில் 3.3 சதவீதமாக உள்ளது" எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: ஒருகாலத்தில் உத்தரப் பிரதேசம் ஊழல்களுக்கு பெயர்பெற்றது - பிரதமர் மோடி