மும்பை: ஹரியானா டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளை மத்திய அரசு கையாளும் முறையை கண்டித்துள்ள சிவசேனா கட்சி, குளிர்காலத்தில், விவாசயிகள் மீது தண்ணீரைப் பீய்ச்சியடிப்பது கொடுமையான ஒன்று எனவும் கூறியுள்ளது.
நிபந்தனையுடன் கூடிய எந்த ஒரு பேச்சுவார்த்தைக்கும் தயார் இல்லை என்று தெரிவித்து, புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் கடந்த ஐந்து நாள்களாக விவசாயிகள் போராடிவருகின்றனர்.
"காஷ்மீரில் பயங்கரவாதிகள் நம்முடைய ராணுவ வீரர்களைக் கொல்லும் சூழ்நிலையில், டெல்லி எல்லையில் விவசாயிகள் பயங்கரவாதிகளைப் போல் பார்க்கப்பட்டுத் தாக்கப்படுகிறார்கள்" என சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழ் சாம்னா தலையங்கம் தீட்டியுள்ளது.
மேலும், அந்தத் தலையங்கத்தில், பாஜக அராஜகத்தை உருவாக்க விரும்புவதாகவும், காலிஸ்தான் ஒரு முடிந்துபோன விஷயம்; அதற்காக இந்திரா காந்தியும் ஜெனரல் அருண்குமார் வைத்யாவும் தங்களது உயிரைத் தியாகம் செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியல் எதிரிகளை ஒடுக்க தனது முழுசக்தியையும் பயன்படுத்தும் பாஜக அரசு, எதிரி நாடுகளுக்கு எதிராக முழு சக்தியையும் பயன்படுத்துவதில்லையே ஏன்? எனவும் சாம்னா கேள்வி எழுப்பியுள்ளது.
இப்போராட்டம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் எம்பி சஞ்சய் ராவத், "பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்த விவசாயிகளுக்கு தலைவராக இருந்த பட்டேலுக்கு பிரமாண்ட பட்டேல் சிலையை அமித் ஷாவும், மோடியும் குஜராத்தில் நிறுவியுள்ளனர்.
இன்றைய தினம் விவசாயிகள் நடத்தப்படும் விதத்தைப் பார்த்து பட்டேல் சிலையின் கண்கள் ஈரமாகியிருக்கும். அரசியல் எதிரிகளை ஒடுக்க பாஜக பயன்படுத்தும், அமலாக்க இயக்குநரகத்தையும், சிபிஐயையும் தங்களது வீரத்தைக் காட்ட ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். எல்லைக்கு அந்தத் துறையை அனுப்பி ராணுவ வீரர்களுக்கு உதவ வைக்க வேண்டும்" எனப் பகடிசெய்தார்.
இதையும் படிங்க: விவசாயிகள் பிரச்னை; அமித் ஷா, நரேந்திரசிங் தோமர், ஜேபி நட்டா ஆலோசனை!