நியூயார்க்: அமெரிக்க அதிபராக கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை டொனல்ட் டிரம்ப் பதவி வகித்தார். கடந்த 2021 ஆம் நடந்த அதிபர் தேர்தலில் அவர் தோல்வியை தழுவினார். ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தோல்வியை ஒப்புக் கொள்ள மறுத்த டொனால்ட் டிரம்ப், பல்வேறு வசைபாடுகளை தன் சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டார்.
இதனால் உள்நாட்டு பிரச்சினை ஏற்பட்டது. 2021ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் பைடனுக்கு வெற்றிச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் திரண்ட டொனால்ட் டிரம்பின் அதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்திற்குள் புகுந்து டிரம்ப்பின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் பலர் படுகாயம் அடைந்தனர்.
அந்த இடமே களேபரமாக காட்சி அளித்தது. இது தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. கலவரத்தில் ஈடுபட்டதாக பலர் கைது செய்யப்பட்டனர். சமூக வலைதள பக்கங்களில் டொனால்டு டிரம்ப் அவதூறு கருத்துகளை பரப்பியதால் தான் இந்த கலவரம் நடக்கக் காரணம் என குற்றஞ்சாட்டப்பட்டது.
இதையும் படிங்க: கட்டிய 3 மாதத்தில் குளிர்பதன கிடங்கு இடிந்து விபத்து - பலி எண்ணிக்கை அதிகரிக்கும் சோகம்!
இதையடுத்து அவதூறு கருத்துகள் வெளியிட்டது, அதை பரப்பி பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தது உள்ளிட்ட காரணங்களுக்காக டொனால்டு டிரம்பின் ட்விட்டர், பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்கள் முடக்கப்பட்டன. இதையடுத்து தனக்கென தனி சமூக வலைதள பக்கத்தை உருவாக்கிய டிரம்ப் அதில் கருத்து மற்றும் அறிக்கைகளை வெளியிட்டு வந்தார்.
அண்மையில், ட்விட்டரை விலை கொடுத்து வாங்கிய உலகின் பெரும் செல்வந்தர் எலான் மஸ்க், ட்விட்டர் பக்கத்தில் டிரம்புக்கு இருந்த தடையயை நீக்கினார். இந்நிலையில், இரண்டு ஆண்டு முடக்கத்திற்கு பின்னர் பேஸ்புக் மற்றும் யூடியூப்பில் டிரம்ப்பின் கணக்குகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
"ஐ எம் பேக்" என தன் பேஸ்புக் பக்கத்தில் டொனால்டு டிரம்ப் பதிவிட்டு உள்ளார். மேலும் "உங்களை காக்க வைத்ததற்கு மன்னிக்கவும்" என்ற வீடியோவையும் தன் யூடியூப் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் டொனால்டு டிரம்ப் பதிவிட்டு உள்ளார். அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.
இதில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் மீண்டும் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிபர் தேர்தலில் போட்டியிட அவர் ஏற்கனவே விருப்பம் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரஷ்ய அதிபர் புதின் கைது? - சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவு என்ன?