லக்னோ (உத்தரப்பிரதேசம்): உத்தரப்பிரதேச மாநிலத்தின் காஸியாபாத் மாவட்டத்தில் உள்ள லோனி பகுதியில் புலந்தர்ஷாவைச் சேர்ந்த 72 வயது அப்துல் சமத், ஜுன் 5ஆம் தேதி தாக்கப்பட்டதாக செய்தி வெளியானது.
இது தொடர்பான காணொலியில், அந்த முதியவரின் தாடியை மர்ம நபர்கள் மழிப்பது போன்ற காட்சி இடம்பெற்றது. இதனை எண்ணற்ற நபர்கள் ட்விட்டரில் பகிர்ந்து இருந்தனர். இதற்கு கடுமையான ஆட்சேபனையை ஓவைசி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த லோனி சம்பவம் தொடர்பாக ட்விட்டர் இந்தியா உட்பட ஒன்பது நிறுவனங்களுக்கு எதிராக காஸியாபாத் காவல் துறையினர் நேற்று வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
![ஓவைசி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/collage_1606newsroom_1623806775_455.jpg)
அவ்வாறு பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், "லோனியில் ஒரு நபர் தூக்கி எறியப்பட்டு, தாடி வெட்டப்பட்ட சம்பவத்திற்கு எந்தவிதமான வகுப்பு வாதமும் நிகழவில்லை.
இந்நிலையில் தி வயர் இணையப் பத்திரிகை, ராணா அயூப், முகமது ஜுபைர், டாக்டர் ஷாமா முகமது, சபா நக்வி, மஸ்கூர் உஸ்மானி, சல்மான் நிஜாமி மற்றும் உண்மையைச் சரிபார்க்காமல் வெளியிட்ட ட்விட்டர் என மேற்கூறியவர்களும் நிறுவனங்களும் இந்த சம்பவத்திற்கு வகுப்புவாத வண்ணம் கொடுக்கத் தொடங்கினர்.
திடீரென்று அவர்கள் அமைதியை சீர்குலைப்பதற்கும் மதங்களிடையே வேறுபாடுகளைக் கொண்டுவருவதற்கும் செய்திகளைப் பரப்பத் தொடங்கினர்" என்று காவல் துறை வழக்குப் பதிந்துள்ளது.
இந்த காணொலி வைரல் ஆவதைத் தடுக்க ட்விட்டர் எதுவும் செய்யவில்லை என்றும், இதனால் ட்விட்டர், ட்விட்டர் கம்யூனிகேஷன்ஸ் இந்தியா பிரைவேட், தி வயர், ராணா அயூப், முகமது ஜுபைர், டாக்டர் ஷாமா முகமது, சபா நக்வி, மஸ்கூர் உஸ்மானி, சல்மான் நிஜாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சூஃபி அப்துல் சமத்தும் குற்றம் சாட்டப்பட்டவர்களும் ஒருவருக்கொருவர் நீண்ட காலமாகத் தெரிந்தவர்கள் என்றும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.