லக்னோ : தனது கணவரின் இறப்பு இயற்கையானது அல்ல, பணியில் இருந்த 6 காவலர்கள் அவரை அடித்தே கொன்றனர் என்று கண்ணீர் மல்க மணீஷ் குப்தாவின் மனைவி மீனாட்சி கூறிய நிலையில் ரியல் எஸ்டேட் அதிபர் மணீஷ் குப்தா கொலை வழக்கு மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் மணீஷ் குப்தா. இவர் கோரக்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது அங்கு காவல் அலுவலர்கள் சோதனை நடத்தினார்கள்.
இந்தச் சோதனையின்போது மணீஷ் குப்தா மயங்கி விழுந்து உயிரிழந்தார். இது குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
மேலும் காவல் பணியின்போது கவனக்குறைவாக செயல்பட்டதாக கூறி காவலர்கள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில் மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இது தொடர்பாக மணீஷ் குப்தாவின் மனைவி மீனாட்சி ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “எனது கணவரின் மரணத்தில் நியாயமான, முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று முதலமைச்சர் உறுதி அளித்தார். வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற எங்களின் கோரிக்கையையும் அவர் ஏற்றுக்கொண்டார்” என்றார்.
இதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேச அரசு மணீஷ் குப்தா மரண வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க பரிந்துரைத்துள்ளது.
இதையும் படிங்க : 'என் கணவரை 6 காவலர்கள் அடித்து கொன்றனர்'- ரியல் எஸ்டேட் அதிபர் மனைவி கண்ணீர்!