கயா: பீகார் மாநிலம் கயா நகரத்தில் உள்ள திகாரி பஜாரைச் சேர்ந்தவர், சந்திரசேகர் செளத்ரியின் மகன் பங்காஜ் செளத்ரி. அதேநேரம், உத்தரப்பிரதேசம் மாநிலம், குஷி நகர் மாவட்டத்தில் உள்ள திலக் நகர் பகுதியைச் சேர்ந்தவர், நந்தலால் என்பவரது மகள், நேஹா. இருவரும் ஆன்லைன் விளையாட்டுகளில் ஒன்றான லூடோ (Ludo) என்ற விளையாட்டை விளையாடி உள்ளனர்.
அப்போதுதான், இருவரும் பேசத் தொடங்கி உள்ளனர். இந்தப் பேச்சு நட்பாக மாறி, பின்னர் காதலாக மலர்ந்து உள்ளது. இதனையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து உள்ளனர். ஆனால், இதற்கு இரு வீட்டாரும் மறுப்புத் தெரிவித்துள்ளனர். இருப்பினும், காதலை விட முடியாது இருவரும் தவித்து வந்தனர். இந்த நிலையில், நேஹா, பங்காஜ் செளத்ரி உள்ள பீகார் மாநிலத்தின் கயா பகுதியில் இருக்கும் அவரது வீட்டுக்கு நேரடியாகச் சென்றுள்ளார்.
இதனிடையே தனது மகளைக் காணவில்லை என உத்தரப்பிரதேச காவல் துறையினரிடம் நேஹாவின் தந்தை புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நேஹாவின் இருப்பிடத்தை அறிந்த காவல் துறையினர், கயாவுக்கு வந்து பார்த்துள்ளனர். அப்போதுதான் சம்பந்தப்பட்ட இருவரும் 18 வயதைக் கடந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில், பங்காஜ் செளத்ரி - நேஹா திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, காவல் துறையினர் அங்கிருந்து புறப்பட்டுள்ளனர். இதனையடுத்து, இருவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில், அங்குள்ள ஒரு கோயிலில் வைத்து இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வு கயா வட்டாரத்தில் பேசுபொருளாக மாறி உள்ளது.
இதையும் படிங்க: கேரளாவில் செல்போன் வெடித்து 8 வயது சிறுமி உயிரிழப்பு!