லக்னோ: உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதி ஜனவரி 8ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஏழு கட்டங்களாகவும், மணிப்பூரில் இரண்டு கட்டங்களாகவும், கோவா, உத்தரகண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.
கோவாவின் 40 தொகுதிகளிலும், உத்தரகண்டின் 70 தொகுதிகளிலும், பிப். 14ஆம் தேதி வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தில் பிப். 10, 14, 20, 23 ஆகிய தேதிகளில் நான்கு கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. பஞ்சாப்பில் உள்ள 117 தொகுதிகளில் கடந்த 20ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
முக்கிய மாவட்டங்கள்
இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் ஐந்தாம் கட்டமாக 61 தொகுதிகளில் இன்று (பிப். 27) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில், மொத்தம் 692 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், 2.24 கோடி மக்கள் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
சுல்தான்பூர், சித்ராகூட், பிரதாப்கர், கௌசாம்பி, பிரயாக்ராஜ், பாரபங்கி, பஹ்ரைச், ஷ்ரவஸ்தி, கோண்டா ஆகிய மாவட்டங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த மாவட்டங்களில், காங்கிரஸின் கோட்டையான அமேதி, ரேபரேலி ஆகிய தொகுதிகளுலும் அடக்கம். மேலும், ராமர் கோயில் இடம்பெற்றுள்ள அயோத்தியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது என்பதால் கடந்த சில நாள்களாக காங்கிரஸ், பாஜக கடும் பரப்புரையில் ஈடுபட்டது.
முக்கிய வேட்பாளர்கள்
மேலும், இதில் முக்கிய வேட்பாளர்களாக துணை முதலமைச்சர் கேஷவ் சந்திரா மௌரியா, காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர் ஆராதனா மிஸ்ரா மோனா, மாநில அமைச்சர் சித்தார்த் நாத் சிங் ஆகியோர் உள்ளனர்.
இந்த ஐந்தாம் கட்ட தேர்தல் மூலம் மொத்தமுள்ள 403 தொகுதிகளில், 292 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. கடைசி இரண்டு கட்ட வாக்குப்பதிவு மார்ச் 3, 7 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
மேலும், உத்தரப்பிரதேசம் மட்டுமின்றி பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களிலும் வரும் மார்ச் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பது நினைவுக் கூரத்தக்கது.
இதையும் படிங்க: உக்ரைனிலிருந்து இந்தியா வந்தடைந்த முதல் விமானம்!