புதுச்சேரியில் ஏஐடியுசியைச் சேர்ந்த ஏராளமான அமைப்புசாரா ஆட்டோ சங்க தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (செப்.2) சட்டப்பேரவையை நோக்கி பேரணியாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
- தீபாவளி பண்டிகை காலங்களில் வழங்கி வந்த உதவித்தொகையை ரூ.5000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்,
- அமைப்புசாரா ஆட்டோ தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும்,
- ஆண்டுக்கு ஒரு முறை ஆட்டோ எப்.சி எடுத்திட காலதாமதமானால் நாள் ஒன்றுக்கு ரூ.50 அபராதம் விதிக்கும் முறையை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்,
- ஆட்டோவிற்கு எல்.பி.ஜி கேஸ் நிரப்புவதற்கு புதிய பங்க் ஏற்பாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியூசி ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் சட்டப்பேரவையை நோக்கிப் பேரணியாக செல்ல முயன்றனர்.
ஆட்டோ சங்க மாநில பொதுச்செயலாளர் சேது செல்வம், மாநில தலைவர் சேகர், மாநில பொருளாளர் செந்தில்முருகன் ஆகியோர் தலைமையில் நடந்த இப்பேரணி ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியுசி மாநில செயல் தலைவர் அபிஷேகம், மாநில தலைவர் தினேஷ் பொன்னையா உள்பட சுமார் 100-க்கும் மேலான ஆட்டோ தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சம்பா கோவில் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து பேரணி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: 'சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா குறித்து ஆளுநரிடம் விளக்க நடவடிக்கை'