பாரமுல்லா: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் உள்ள குல்மார்க் ஸ்கை ரிசார்ட்டில் கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு போட்டிகளின் 3ஆம் பதிப்பு இன்று (பிப்.10) தொடங்கியது. பிப்.14ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிகளை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் 29 மாநிலங்களில் இருந்து வந்த 1,500-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இந்த போட்டிகளில் கலந்துகொள்கின்றனர். மொத்தமாக 11 வகையான போட்டிகள் நடக்கின்றன.
இந்த நிகழ்வின்போது பேசிய அனுராக் தாக்கூர், இந்த போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஒலிம்பிக்கில் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் திறமை இருக்கிறது. ஒரு வீரர் பதக்கம் வெல்லும் போது, நாடு முழுவதும் ஒன்றிணையும். பிவி சிந்து, நீரஜ் சோப்ரா, மீராபாய் சானு ஆகியோர் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்தியாவின் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க நாடு முழுவதும் விளையாட்டு மையங்கள் கட்டப்பட வேண்டும் என்றும் குல்மார்க்கில் குளிர்கால விளையாட்டுகளுக்கு பிரதயேக மையம் அமைக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் கால்பந்து, வுஷூ உள்ளிட்ட போட்டிகளை வளர்த்து வருகின்றன. அதனை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது எனத் தெரிவித்தார். இதையடுத்து பேசிய மாநில துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, காஷ்மீரில் விளையாட்டு போட்டிகளை ஊக்குவிக்க அனைத்து நடவடிக்கையும் மாநில நிர்வாகத்தால் எடுக்கப்பட்டு வருகிறது. இங்கு கெஜட்டட் அதிகாரி பணிகளிலும் விளையாட்டு வீரர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். விளையாட்டில் வெற்றி, தோல்வி கிடையாது. கற்றல் மட்டுமே உள்ளது. இந்த பனி மலைகளில் வாழும் மக்கள் உங்களால் முடிந்ததைச் செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: Teddy Day 2023: காதலர் தின வாரத்தின் 'டெடி டே' ஸ்பெஷல் என்ன?