சூரியனை ஆய்வு செய்ய இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா-எல்1, இன்று (செப்.2) காலை 11:50 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் 2-ஆவது ஏவுதளத்தில் இருந்து புறப்பட்டது. பூமியில் இருந்து புறப்பட்ட 64ஆவது நிமிடத்தில், 648.71 கி.மீ தொலைவில் பூமியின் தாழ்வு வட்ட பாதையில் வெற்றிகரமாக விடுவிக்கபட்டது.
இந்நிலையில் இது குறித்து இஸ்ரோ மையத்தில் பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், "ஆதித்யா எல்-1 விண்கலன் வெற்றிகரமாக புவியின் நீள்வட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. ஆதித்யா எல்-1 தனது நீண்ட பயணத்தை வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது. அடுத்த 125 நாள்கள் அது சூரியனை நோக்கிப் பயணித்து லாக்ராஞ்சின் எல்-1 இலக்கை எட்டும். இந்தத் திட்டத்துக்கு ஆதரவாக இருந்த ஆதித்யா-1 திட்ட இயக்குநர் நிகர் சாஜி, இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் பாராட்டுகள்.
ஆதித்யா எல்-1 பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியுள்ள இந்நாளில் இன்னொரு தகவலையும் பகிர விரும்புகிறேன். சந்திரயான்-3 லேண்டர், ரோவரை உறக்க நிலைக்கு கொண்டு செல்லும் பணிகளை இன்னும் ஓரிரு நாள்களில் தொடங்கவுள்ளோம். நிலவின் இரவை அவை தாங்கி மீண்டுவரும் என நம்புகிறோம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஆதித்யா எல்-1 வெற்றிகரமாக விண்ணில் அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட இத்தருணம் இந்தியாவுக்கு ஒரு சூரிய ஒளிப் பாய்ச்சல் (சன் ஷைன்) தருணம்” என்று கூறினார். தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்ததோடு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குப் பாராட்டுகளை உரித்தாக்கினார்.
தொடர்ந்து பேசிய திட்ட இயக்குநர் நிகர்சாஜி, “இந்தத் திட்டத்திற்கு உதவிய அனைத்து நிறுவனங்களும் என் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகள் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், என்னுடன் பணியாற்றிய விஞ்ஞானிகளுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சூரியனை ஆய்வு செய்ய பணி இனி தொடரும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: Aditya L1 Launch: ஆதவனை ஆராயும் பயணத்தில் ஆதித்யா எல்-1 விண்கலம்..!