டெல்லி: 2023-24ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்ற மக்களவையில் இன்று(பிப்.1) தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.
அவர் தனது உரையில், நாட்டில் 5ஜி சேவையை மேம்பாடுத்துவதற்காக 100 ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்றும், முன்னணி கல்வி நிறுவனங்களில் மூன்று செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) மையங்கள் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.
இனி அரசுத் துறைகளில் பான் கார்டு முக்கிய ஆவணமாக பயன்படுத்தப்படும் என்றும், அரசுத்துறைகளில் அனைத்து டிஜிட்டல் பணிகளுக்கும் பொதுவான அடையாள அட்டையாக பான் கார்டை பயன்படுத்தலாம் என்றும் அறிவித்தார். ஆதார், பான், டிஜி-லாக்கர் போன்றவை தனிநபர் அடையாள உறுதிப்படுத்தலுக்கு பிரபலமாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இ-கோர்ட் திட்டத்தின் கீழ் 3வது கட்டத்திற்காக 7,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், என்.ஜி.ஓக்களுடன் இணைந்து டிஜிட்டல் நூலகத்தை வலுவாக கட்டமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தார். சுற்றுலாத்துறையை மேம்படுத்த தனி செயலி உருவாக்கப்படும் என்றும் அறிவித்தார்.