குப்வாரா: கடந்த 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் பிபி.தீட்வால் கர்னாவின் ஹரிடால் பகுதியில் இரவு சுமார் 11 மணி அளவில் துப்பாக்கிச் சூடு நடத்தும் சத்தம் கேட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் துறையினர் இரவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதன் காரணம் மற்றும் அதன் பின்னனி குறித்து தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.
துப்பாக்கிச் சூடு குறித்து அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டதன் அடிப்படையில், இந்த சம்பவம் நிகழ்ந்தது எதற்கு, எங்கு என்ற பல்வேறு கோணங்களில், உள்ளூர் காவல் துறையினருடன் ராணுவமும் களமிறங்கி விசாரணையை தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இந்த தேடுதலின் போது, பிங்லா ஹரிடல் பகுதியில், குண்டடிப்பட்டு சாலையில் உயிரற்ற நிலையில் இருந்தவரை கண்டுபிடித்தனர். பின்னர் உடலை மீட்ட காவல் துறையினர், உடற்கூராய்விற்காக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பபட்டது.
மேலும், காவல் துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணையை மேற்கொண்டதில், கடந்த 28 ஆம் தேதி இரவு 11 மணியளவில் ரவுடிகளுக்குள் ஏற்பட்ட திடீர் துப்பாக்கிச் சூட்டினால், பஞ்சதரன் கர்னாவைச் சேர்ந்த சையத் அக்பர் ஷாவின் மகன் முக்தார் அகமது ஷா (வயது 42) இறந்துள்ளார் என்று தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து இந்த துப்பாக்கிச் சூடு ரவுடிகளுக்குள் திட்டமிட்டு நடத்தப்பட்டதா அல்ல திடீர் கலவரத்தால் நடத்தப்பட்டதா என்ற கோணங்களில் காவல் துறையினர் விசாரணையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர். முன்னதாக முக்தார் அகமது போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததனால், காவல் துறையினரால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், இவரது மரணம் குறித்து காவல் துறைக்கு பல்வேறு சந்தேகங்களை கிளப்பி உள்ளது.
ஜம்மு - பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் முக்தார் மற்றும் அவரது தம்பி சதிக் ஷாவும் போதைப் பொருள், ஆயுதக் கடத்தல் மற்றும் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர். இதனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்முவில், தேடப்படும் முன்னனி குற்றவாளிகளாக இருவரும் அறியப்படுகின்றனர்.
இது மட்டுமின்றி, முக்தார் குடும்பத்தில் குறைந்தது 6 பேர் மீது, ஆயுதக் கடத்தல், மற்றும் தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, தேடப்பட்டு வருவதாக போலீசார் கூறியுள்ளனர். இந்நிலையில் இந்த துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்தியது யார், என்ன காரணத்திற்காக நிகழ்த்தப்பட்டது என விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், காவல் துறையினருக்கு இந்த வழக்கு சவாலாக அமைந்துள்ளது. மேலும் இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கர்நாடகாவில் பயங்கரவாத சந்தேகத்தின் அடிப்படையில் மேலும் ஒருவர் கைது!