நியூயார்க் (அமெரிக்கா): உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி போர் தொடங்கியது. இரு நாட்டு ராணுவமும் முக்கிய நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
உக்ரைனிலிருந்து மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக வெளியேறியுள்ளனர். போர் தொடங்கி இரண்டு மாதங்களை எட்டி உள்ளது. இந்தநிலையில், ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த ஐக்கிய நாடுகள் சபை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அந்தவகையில், ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், ஏப்ரல் 26ஆம் தேதி, ரஷ்யாவின் மாஸ்கோ நகருக்கு சென்று அந்நாட்டுஅதிபர் விளாடிமிர் புடின் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோரை சந்தித்து பேச உள்ளார்.
இந்தச் சந்திப்பை ரஷ்யா அதிபர் மாளிகை கிரெம்ளின் உறுதி செய்துள்ளது. அதைத் தொடர்ந்து, ஏப்ரல் 28ஆம் தேதி, ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் உக்ரைன் செல்கிறார். அங்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா ஆகியோரை சந்திக்கிறார்.
இரண்டு மாதங்களாக போர் தொடரும் சூழலில் ஐநா பொதுச்செயலாளரின் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இரு நாட்டு அதிபர்களுடன் போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஐ.நா. கவுன்சிலில் இருந்து ரஷ்யா நீக்கம்?