பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் டொமினிக் ராப் நான்கு நாள் அரசு முறை பயணமாக இன்று இந்தியா வருகிறார். இப்பயணத்தின்போது இருநாட்டு விவகாரங்கள், பிராந்திய விவகாரங்கள், சர்வதேச பிரச்னைகள் உள்ளிட்டவை குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இந்த பயணத்தின் ஒரு அங்கமாக டிசம்பர் 17ஆம் தேதி, கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவை அவர் சந்திக்கவுள்ளார். அதுமட்டுமின்றி, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ஆகியோரையும் அவர் சந்தித்து பேசவுள்ளார்.
பிரெக்சிட் ஒப்பந்தம் போடப்பட்டதற்கு பிறகான காலத்தில், வர்த்தகம், பாதுகாப்பு, காலநிலை, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் இருநாட்டு உறவை மேம்படுத்த இப்பயணம் உதவும் என அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "டிசம்பர் 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதிவரை இப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. டிசம்பர் 15ஆம் தேதி, பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் டொமினிக் ராப் ஜெய்சங்கரை சந்தித்து பேசவுள்ளார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.