திருவனந்தபுரம்: கேரளத்தில் உள்ளாட்சி தேர்தல் பரபரப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. முதலமைச்சர் பினராயி விஜயன், வீடியோ கான்பரன்ஸிங் (காணொலி காட்சி) வாயிலாக மார்க்சிஸ்ட் கூட்டணி இடதுசாரி வேட்பாளர்களை ஆதரித்து உரையாற்றி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பினராயி விஜயன் கூறுகையில், “மத்தியில் ஆளும் அரசாங்கம் மற்ற பாஜக அல்லாத மற்ற அரசுகளை கவிழ்க பெரும்தொகையை செலவிடுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் விலைக்கு வாங்கப்படுகின்றனர்.
இடதுசாரிகள் கேரளத்தில் மட்டுமே ஆட்சிப் பொறுப்பில் உள்ளனர்; நாங்கள் எந்த எம்.எல்.ஏ.,க்களையும் விலை கொடுத்து வாங்குவது போன்ற நாசவேலைகளில் ஈடுபட்டது கிடையாது.
ஆனால் புலனாய்வு அமைப்புகளை கொண்டு கேரளத்தில் மத்திய அரசு நாசவேலையில் ஈடுபடுகிறது. காங்கிரஸூம், முஸ்லிம் லீக் கட்சியும் பாஜகவுக்கு இரகசியமாக உதவுகின்றன.
ஆனால் நாங்கள் ஒரு சில வாக்குகளுக்காக மதவாத சக்திகளோடு கூட்டணி வைக்கவில்லை. நாட்டின் தலைநகரில் தற்போது என்ன நடக்கிறது? பொதுமக்களின் உரிமைகளை பறித்து, நசுக்கும் மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள், தொழிலாளர்கள் போராடுகின்றனர். இடதுசாரி ஜனநாயக முன்னணியினர் இவர்களின் கூட்டாளிகள்.
பாஜக அரசின் பொருளாதார கொள்கைகள் நாட்டை அழித்துவருகின்றன. முன்னதாக இது காங்கிரஸின் கொள்கையாக இருந்தது. காங்கிரஸூக்கும், பாஜகவுக்கும் ஒரே பொருளாதார கொள்கைதான். எந்த வேறுபாடும் கிடையாது.
பாஜக பெருநிறுவனங்களுக்காக ஆட்சி நடத்துகிறது. பாஜகவின் ஆட்சியின் கீழ் பெருநிறுவன முதலாளிகள், பெரும் பணக்காரர்களாகவும் மக்கள் ஏழைகளாவும் உள்ளனர்.
நாட்டில் இதுவரை வரலாறு காணாத வீழ்ச்சி நிலவுகிறது. ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா அலுவலர்கள் கூட அவசர நிலையில் உள்ளனர்” என்றார்.
கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக கேரளத்தில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தலில் தேர்தல் பரப்புரை ஞாயிற்றுக்கிழமை (டிச.6) மாலையுடன் நிறைவடைகிறது. தேர்தல் டிச.8, 10 மற்றும் 14ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
இதையும் படிங்க : நாட்டின் உயிர் நாடியான விவசாயிகளுடன் நாம் துணைநிற்க வேண்டும் - பினராயி விஜயன்