கோழிகோடு : கேரள மாநிலம் கோழிகோட்டில் காயச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், நிபா வைரஸ் காரணமாக இருவரும் உயிரிழந்தனரா என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.
இதையடுத்து கேரள சுகாதாரத்துறை உச்சபட்ச எச்சரிக்கை விடுத்து உள்ளது. மேற்கொண்டு வைரஸ் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக கேரள சுகாதாரத் துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தனியார் மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த இருவரும் திடீரென உயிரிழந்த நிலையில், நிபா வைரஸ் காரணமாக உயிரிழந்து இருக்கக் கூடுமோ என்ற சந்தேகம் கேரள சுகாதாரத்துறைக்கு எழுந்து உள்ளது.
இதுதொடர்பாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தரப்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில், தனியார் மருத்துவமனைையில் அனுதிக்கப்பட்டு இருந்த இரண்டு பேரின் உயிரிழப்புக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த மரணங்கள் நிபா வைரஸ் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், உயிரிழந்தவர்களில் ஒருவரின் உறவினர் தீவிர சிகிச்சையில் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தலைமையில் உயர் மட்ட ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நிபா வைரஸ், பழம் தின்னி வவ்வால்களில் இருந்து பரவும் ஒரு வகையான வைரஸ் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2018 ஆம் ஆண்டு, முதன் முதலில் கேரளாவில் நிபா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது. அதில் சுமார் 17 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் நிபா வைரஸ் அச்சுறுத்தலை கேரளா எதிர்கொண்டு வருகிறது. தற்போது மீண்டும் அந்த அச்சுறுத்தல் சூழல் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.
கேரளாவில் நிபா வைரஸ் பரவல் காரணமாக சந்தேகிக்கும் வகையில் இரண்டு மரணங்கள் பதிவாகி இருப்பதாக கூறப்படும் நிலையில், தமிழக எல்லையோர பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது. கேரளாவில் இருந்து வாகனங்கள் பாதுகாப்பு சோதனைகளுக்கு பின்னர் அனுமதிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : சந்திரபாபு நாயுடு கைது எதிரொலி.. ஆந்திராவில் பந்த்.. கலவரத்தில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் கட்சியினர்!