சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் நிலவும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக, இரண்டு தேசிய நெடுஞ்சாலைகள், 227 சாலைகள் பனியால் சூழப்பட்டுள்ளன. கடும் பனிப்பொழிவால், மாநிலத்தின் இரண்டு தேசிய நெடுஞ்சாலைகள், 227 சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இமாச்சல பிரதேசத்தின் பல மாவட்டங்களில் புதன்கிழமை, வியாழக்கிழமை அதிக பனிப்பொழிவு இருக்கும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. மாநிலத்தில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அதன்படி, பல பிராந்தியங்களில் அதிக பனிப்பொழிவு ஏற்பட்டது. பனிப்பொழிவால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. மாநிலத்தின் லாஹூல்-ஸ்பிட்டியிலுள்ள 101 சாலைகள், சம்பாவில் 61, குலுவில் 22, கின்னாரில் 15 சாலைகள் பனிப்பொழிவு காரணமாக மூடப்பட்டுள்ளன.
அதிக பனிப்பொழிவு காரணமாக, வாகன போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று நர்கண்டா-5, லே-மணாலி ஆகிய இரு முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளும் பனிப்பொழிவால் சூழப்பட்டுள்ளதால், அங்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
அவ்வழியாக செல்லும் மாநில அரசின் பேருந்துகள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. பனிப்பொழிவின் பிடியில் மாநிலத்தின் பல பகுதிகள் கடுமையாக சிக்கியுள்ளன. முக்கிய நெடுஞ்சாலைகள், சாலைகள் மூடப்பட்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
மாநிலத்தின் உயர்ந்த பகுதியில் இருக்கும் குடிநீர் திட்டங்கள், மின் மாற்றிகள் (டிரான்ஸ்பார்மர்) குளிர் காற்றால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இதேபோன்று கீழ் பகுதிகளில் வெப்பநிலை கடுமையாக குறைந்துள்ளது. சாலைகளில் சூழந்திருக்கும் பனிகளை அகற்றும் பணியில் மாவட்ட நிர்வாக பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இது சிக்கலான பணியாகும்.
மேற்கில் ஏற்பட்ட இடையூறு காரணமாக, மாநிலத்தின் உயர்ந்த பகுதிகளில் பனிப்பொழிவும், சமவெளிகளில் மழையும் பெய்துள்ளதாகவும், இப்போதைக்கு, இமாச்சலத்தில் வானிலை தெளிவாக இருக்கும், டிசம்பர் 2 வரை மழை, பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்பில்லை என, வானிலை ஆய்வு இயக்குனர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.