தெலங்கானா பெடபள்ளி மாவட்டம் ஈசம்பேட்டா பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, அதே குடும்பத்தில் உள்ள மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்ற காவல் துறையினர், அங்கு மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அதில், சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் மார்ச் 30ஆம் தேதி ஒரு தர்பூசணி பழத்தை வாங்கியதாகவும், அதனை பாதியாக வெட்டி உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோரும், பாட்டியும் உண்டதும் தெரிய வந்தது.
மீதமிருந்த பழத்தை ஜன்னல் அருகே வைத்த நிலையில், அதை அவ்வழியாக சென்ற எலி கொஞ்சம் சுவைத்திருக்கிறது. இதையறியாத குடும்பத்தினர் மறுநாள் மீதமிருந்த பழத்தை பங்கிட்டு சாப்பிட்டது விசாரணையில் கண்டறியப்பட்டது.
தர்பூசணி பழத்தைச் சாப்பிட்ட பின்னர் அக்குடும்பத்தைச் சேர்ந்த 5 நபர்களுக்கு உடல் நலத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர் வயிற்றுப்போக்கு, வாந்தியால் அவதிப்பட்டு வந்த அக்குடும்பத்தினர், சிகிச்சைக்காக கரீம்நகர் தனியார் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிவானந்த் (12) மற்றும் சரண் (10) ஆகிய இரு சிறுவர்களும் உயிரிழந்துள்ளனர்.
சிறுவர்களின் தாத்தா அந்தப் பழத்தை உண்ணாததால் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:ஏப்ரல் ஃபூல் பண்றீங்கனு நினைச்சோம்... கிராமத்தினர் அலட்சியத்தால் சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்