அருணாச்சலப் பிரதேசம் டியுன் பகுதியில் அமைந்துள்ள தனியார் எண்ணெய் நிறுவனத்தின் இரண்டு நிர்வாகிகளை 15 பேர் கொண்ட பிரிவினைவாத கும்பல் கடத்திச் சென்றுள்ளது.
கடத்தி செல்லப்பட்டுள்ள நிர்வாகிகளின் பெயர் கோகாய், ராம்குமார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கோகாய்,அசாம் மாநிலம் சிவசாகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் ராம்குமார் பிகார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடத்தல் சம்பவத்தை அருணாச்சல பிரதேச டிஜிபி சத்தியேந்திர குமார் உறுதி செய்துள்ளார். இந்த கடத்தலின் பின்னணியில் உல்பா பயங்கரவாத அமைப்பு உள்ளதா என சந்தேகிக்கப்படுவதாகவும் டிஜிபி சத்தியேந்திர குமார் தெரிவித்துள்ளார்.
அருணாச்சல பிரதேசத்தில் நாளை(டிச.23) பஞ்சாயத்துத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் இந்த கடத்தல் சம்பவம் அரங்கேறியுள்ளது.
முன்னதாக, டிசம்பர் 21ஆம் தேதி, உல்பா அமைப்பின் துணைத் கமாண்டர் ராஜ்கோவா 18 உறுப்பினர்களுடன் சரணடைந்தார்.