குஜராத்: குஜராத் மாநிலத்தில் நேற்று(அக்.30) மோர்பி என்ற இடத்தில் ஆற்றின் குறுக்கே நிர்மாணிக்கப்பட்ட பழமையான தொங்கு பாலம் இடிந்து விழுந்த விபத்தில், 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி தெரிவித்தார்.
இதுதொடர்பாக குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஐஜி தலைமையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில், மோர்பி பால விபத்தில் பாஜக எம்.பி. ஒருவரின் உறவினர்கள் 12 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ராஜ்கோட்டைச் சேர்ந்த பாஜக எம்.பி. மோகன்பாய் குந்தாரியாவின் சகோதரியின் குடும்பத்தினர் 12 பேர் இந்த பால விபத்தில் உயிரிழந்ததாகவும், அதில் 5 குழந்தைகளும் அடங்குவர் என்றும் எம்.பி.யின் தனி உதவியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்று விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்ற எம்.பி. மோகன்பாய் குந்தாரியா மீட்புப்பணிகளைப் பார்வையிட்டார். தொங்கு பாலத்தில் அதிக பாரம் ஏற்றப்பட்டதன் காரணமாகவே, இந்த விபத்து நடந்துள்ளதாக குந்தாரியா தெரிவித்தார்.
இதையும் படிங்க: 5 தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட மோபிர் பாலம் - தரச் சான்றிதழ் பெறப்பட்டதா?