பிகார்: பிகார் மாநிலம், முசாபர்பூர் மாவட்டத்தில் ரயிலில் இருந்து நேற்று (ஆகஸ்ட் 17) 12 குழந்தைகள் மீட்கப்பட்டனர். இவர்கள் தொழிற்சாலையில் வேலை செய்வதற்காக அழைத்துச்செல்லப்பட்டதாகவும், இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிகார் ரயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் இந்த குழந்தைகள் தொழிற்சாலைகளில் வேலைசெய்வதற்காக உ.பி மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. முசாபர்பூர் ரயில் நிலையத்தில் இருந்து செல்லும் கர்மபூமி எக்ஸ்பிரஸில் குழந்தைகள் மீட்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர். ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் அரசு ரயில்வே காவல் படை ஆகியோரின் கூட்டு நடவடிக்கையால் இது நடந்துள்ளது. மேலும் மீட்கப்பட்ட அனைத்து குழந்தைகளும் 14 வயதுக்குக்கீழ் உள்ளவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் குழந்தைகளை லூதியானா, அமிர்தசரஸ் மற்றும் சஹாரன்பூர் ஆகியப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்ல இருந்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர்கள் கதிஹார், பூர்னியா, தர்பங்கா, சிதாமர்ஹி, அராரியா மற்றும் ஷியோஹர் மாவட்டங்களில் வசிப்பவர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஜார்க்கண்ட் சிறை கைதி கொலை வழக்கில் 15 பேருக்கு தூக்கு தண்டனை