பிரபல வாகன விற்பனை நிறுவனமான டிவிஎஸ், ஈராக் தலைநகர் பாக்தாத்தில் புதிய விற்பனை நிலையத்தை தொடங்கியுள்ளது. இங்கு, விற்பனையுடன், வாகனங்களுக்கான சர்வீஸ், உதிரிபாகங்களும் விற்பனை செய்யப்படும்.
ஈராக்கில், டிவிஎஸ் ஸ்டார் (STAR HLX 150 5 Gear), டிவிஎஸ் கிங்க் டீலக்ஸ் பிளஸ், ஆட்டோ ரிக்ஷா ஆகியவற்றை அறிமுகம் செய்யவும், தனது சேவையை விரிவுபடுத்தவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு முதலே ஈராக் நாட்டில் விநியோகஸ்தகர்கள் மூலமாக டிவிஎஸ் தனது வாகனங்களை விற்பனை செய்து வந்தது. தற்போது, டிவிஎஸ் நிறுவனம் அங்கு பிரத்யேக ஷோரூமை தொடங்கியுள்ளது.
இதுகுறித்து, டிவிஎஸ் பன்னாட்டு வணிக பிரிவு துணைத் தலைவர் திலீப் கூறுகையில், "டிவிஎஸ் நிறுவன ஷோரூமை பாக்தாத் நகரின் முக்கிய வணிகப் பகுதியில் தொடங்கியுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தற்போது, ஈராக் சந்தையில் எங்களது முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.
இங்கு விற்பனை, சேவை, உதிரி பாக விற்பனையில் ஈடுபடவுள்ளோம். இதனால் எங்களது வாடிக்கையாளர்கள் மன நிறைவு அடைவார்கள் என நம்புகிறோம்" என்று கூறினார்.
இதையும் படிங்க: தலைமைச் செயலாளரை அழைத்த மத்திய அரசு... அனுப்ப அடம்பிடிக்கும் மம்தா!