தமிழ்நாடு பதிவு எண் கொண்ட லாரி ஒன்று, ஹைதராபாத்திலிருந்து 8 கோடி ரூபாய் மதிப்பிலான 2.40 லட்சம் கோவாக்சின் டோஸ்களை பஞ்சாபிற்கு ஏற்றிச் சென்றுள்ளது. ஆனால் இது நிர்ணயிக்கப்பட்ட பஞ்சாபை சென்றடையவில்லை.
இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் நரசிங்கப்பூர் மாவட்டத்தில், கரேலி என்னும் பகுதியில் சரக்கு வாகனம் ஒன்று 12 மணி நேரமாக சாலையில் சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருப்பதாக நேற்றுமுன்தினம் (ஏப். 30) காவல் துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது.
தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று, அந்த வாகனத்தை ஆய்வுசெய்தனர். அதில், பாரத் பயோடெக் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசி மருந்து இருந்துள்ளது.
கிட்டத்தட்ட அதன் மதிப்பு 8 கோடி ரூபாய் என நரசிங்கப்பூர் காவல் கண்காணிப்பாளர் விபுல் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரிக்க காவல் துறையினர் ட்ரான்ஸ்போர்ட் கம்பெனிக்கு தொடர்பு கொண்டபோது, வாகனத்தை இயக்கிவந்தது ஓட்டுநர் விகாஸ் மிஷ்ரா என்பது தெரியவந்தது.
ஆனால் அவர் எங்கு சென்றார் என்பது தொடர்பாக எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை எனக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.