ஹைதராபாத்: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தெலங்கானா முதல்வர் கே சந்திரசேகர ராவின் மகள் கவிதா மற்றும் அக்கட்சியை சார்ந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீது ED மற்றும் CBI வழக்குகள் பதிவு செய்துள்ளது. இந்நிலையில், பஞ்சாரா ஹில்ஸில் உள்ள தனது இல்லத்தில், டிஆர்எஸ் எம்எல்சி கல்வகுந்த்லா கவிதா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது , “நாட்டில் மோடி அரசு ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகள் ஆகிறது. கடந்த 8 ஆண்டுகளில் பாஜக 9 மாநிலங்களை நிலைகுலையச் செய்துள்ளது. அதே போல் தெலங்கானாவில் ஆளும் டிஆர்எஸ் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்த பாஜக முயன்று வருகிறது.
ஒரு மாநிலத்தில் தேர்தல் நடக்கப்போகிறது என்றால் அங்கே முதலில் அமலாக்கத் துறை வரும், பின்னர் பிரதமர் மோடி வருவார். அந்த வகையில், தெலுங்கானா சட்டசபைக்கு அடுத்த டிசம்பரில் தேர்தல் நடைபெற உள்ளதால், மோடிக்கு முன்பு அமலாக்கத் துறை வருகிறது. எந்த விசாரணைக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.
அமலாக்கத் துறையும், சிபிஐயும் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சிக்கு எதிராக இப்போது திருப்பிவிடப்பட்டுள்ளன. மத்திய புலனாய்வு அமைப்புகளைக் கொண்டு தேர்தலை வெல்ல முடியாது. தெலங்கானாவில் டிஆர்எஸ் ஆட்சி சுமுகமாக நடைபெறுகிறது. இதனை கவிழ்க்க வேண்டும் என்று பாஜக சதி செய்கிறது. அந்த சதியை நாங்கள் மக்களுக்கு அம்பலப்படுத்திவிட்டோம்.
ஊடகங்களில் செய்திகளை கசிய விட்டு தலைவர்களின் நற்பெயரை கெடுக்க பாஜக முயல்கிறது. இதனை மக்கள் நிராகரிக்க வேண்டும். இந்தப் போக்கு மாற வேண்டும். ஜனநாயக ரீதியாக என்ன செய்வோம் என்பதை மக்களிடம் சொல்லி வெற்றி பெற வேண்டும். அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ -ஐ பயன்படுத்தி அல்ல.
பாஜக எங்களை சிறையில் அடைக்கலாம். ஆனால் நாங்கள் அப்போதும் பாஜகவின் பொய்களை வெளிக்கொண்டு வருவோம். பாஜக ஆட்சி அமைந்த 8 ஆண்டுகளில் 9 மாநிலங்களில் ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தி பாஜக ஆட்சி அமைத்துள்ளது. நாங்கள் நேர்மையுடன் மக்களுக்காக உழைக்கும் வரை டிஆர்எஸ் -க்கு எந்த பிரச்னையும் வராது” என்றார்.
இதையும் படிங்க: மத்திய அமைச்சர் எல்.முருகன் ரகசிய யாகம்: பழனியில் நடந்தது என்ன?