அகர்தலா: திரிபுரா சட்டப்பேரவையில் இந்தாண்டுக்கான முதல் கூட்டத்தொடர் கடந்த 24ஆம் தேதி தொடங்கியது. கடந்த திங்கள்கிழமை அவையில் விவாதம் நடந்து கொண்டிருந்த போது, பக்பாஷா சட்டமன்றத் தொகுதியின் பாஜக எம்எல்ஏ ஜதாப் லால் நாத், செல்போனில் ஆபாசப் படம் பார்த்துக் கொண்டிருந்தார். இதை அவருக்குத் தெரியாமல் அவையில் இருந்த சக எம்எல்ஏ செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
இந்நிலையில் சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ ஜதாப் லால் நாத் ஆபாசப் படம் பார்த்த காட்சிகள், சமூக வலைதளங்களில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. அவரது செயலுக்கு எதிர்க்கட்சி பிரமுகர்கள் உட்பட பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் அனிமேஷ் டெப்பார்மா கூறுகையில், "பாஜக எம்எல்ஏவின் இந்த செயல் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சருக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. லால் நாத் அமர்ந்திருந்த இருக்கையை கங்கை நீரால் தூய்மைப்படுத்த வேண்டும். மீண்டும் அவரை அந்த இருக்கையில் அமர அனுமதிக்கக் கூடாது. இதேபோன்ற செயலில் ஈடுபட்ட ஒடிசா காங்கிரஸ் எம்எல்ஏ நபா கிஷோர் தாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதேபோல் லால் நாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டப்பேரவைக்கு அவரை 6 ஆண்டுகள் வர விடாமல் தடை விதிப்பது அவசியம்" என்றார்.
காங்கிரஸ் எம்எல்ஏ பிராஜித் சின்ஹா கூறுகையில், "சட்டப்பேரவைக்குள் எம்எல்ஏக்கள் செல்போன் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். நாங்கள் அனைவரும் அவை நடவடிக்கையில் கவனம் செலுத்தும் போது, ஜதாப் லால் நாத் செல்போனில் ஆபாசப் படம் பார்த்திருக்கிறார். இது அவையின் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டது" எனக் கூறினார்.
இந்நிலையில் இதுதொடர்பாக தனக்கு எந்தப் புகாரும் வரவில்லை என்றும், புகார் கொடுக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திரிபுரா சட்டப்பேரவை சபாநாயகர் பிஸ்வா பண்டு சென் கூறியுள்ளார். அதேநேரம் எம்எல்ஏ லால் நாத்திடம் விளக்கம் கேட்டு பாஜக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த லால் நாத் கடந்த 2018ஆம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார். அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பக்பாஷா தொகுதியில் போட்டியிட்ட அவர், வெற்றி பெற்றார்.
கடந்த 2012ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவையில் பாஜக அமைச்சர்கள் லட்சுமண் சாவடி மற்றும் சி.சி.பாட்டீல் ஆகியோர் செல்போனில் ஆபாசப் படம் பார்த்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. ஒருவர் செல்போனில் ஆபாசப் படம் பார்த்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையும் படிங்க: "தஹி இல்லை தயிர் தான்".. பின் வாங்கிய மத்திய நிறுவனம்..