அமராவதி: இஸ்லாமிய பெண்களை தலாக் கூறி கணவர் விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடை விதிக்கும் முத்தலாக் தடை சட்டம், கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் அமலில் உள்ளது. அதன்படி, ஒரேநேரத்தில் மூன்று முறை தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்வது சட்டப்படி குற்றம். இந்த நிலையில், ஆந்திராவில் பொன்னூரைச் சேர்ந்த கௌசேபி என்ற பெண்மணி கடந்த 2004ஆம் ஆண்டு கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் கோரி மாவட்ட நீதிபதியிடம் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், கடந்த 2002ஆம் ஆண்டு பதிவுத் தபாலில் முத்தலாக்(தலக் நாமா) கூறியதாகவும், அதை கௌசேபி நிராகரித்து விட்டதால், அவருக்கு ஜீவனாம்சம் கோரும் உரிமை இல்லை என்றும் கணவர் ஜான் சைதா முறையிட்டார். அவரது வாதங்களை நிராகரித்த மாவட்ட நீதிபதி, கௌசேபி மற்றும் அவரது மகனுக்கு மாதம் 800 ரூபாயை ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஜான் சைதா குண்டூரில் உள்ள முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மகனின் பராமரிப்பு செலவுகளை மட்டும் வழங்க வேண்டும் என்றும், மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்கத் தேவையில்லை என்றும் குண்டூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து 2006ஆம் ஆண்டு, கௌசேபி உயர் நீதிமன்றத்தை அணுகினார். இந்த வழக்கை அண்மையில் விசாரித்த உயர் நீதிமன்றம், குண்டூர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து, பொன்னூர் மாவட்ட நீதிபதியின் தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டது. பதிவுத் தபாலில் முத்தலாக் கூறினாலும் அது செல்லாது என்றும் தீர்ப்பளித்தது.
மேலும், இஸ்லாமிய சட்ட விதிகளின்படி, கணவன் மனைவி விசாகரத்து செய்யும் முன்பு மத்தியஸ்தர்கள் சமரசம் செய்ய முயற்சிக்க வேண்டும், அது முடியாதபோது நியாயமான காரணங்களுக்காக வெவ்வேறு நேரங்களில் மூன்று முறை தலாக் சொல்ல வேண்டும், மூன்று முறைக்கு இடையே சரியான கால இடைவெளி இருக்க வேண்டும், தலாக் பற்றி கணவன் மனைவிக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட நீதிமன்றம், மாறாக மூன்று முறை தலாக் சொல்லி பதிவுத் தபால் அனுப்புவது செல்லாது என விளக்கமளித்தது.
இதையும் படிங்க:யமுனை நதியில் கழிவுநீர் கலப்பு: ரூ. 150 கோடி அபராதம் விதித்த பசுமை தீர்ப்பாயம்