புதுச்சேரி: பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரரான பிர்சா முண்டாவின் பிறந்தநாளை வனவாசி பெருமித தினமாக நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாகப் புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், பழங்குடியினர் தின விழா கம்பன் கலை அரங்கில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாகத் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், தலைமைச் செயலாளர் ராஜீவ் வர்மா, மாவட்ட ஆட்சியர் வல்லவன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உட்பட, பழங்குடியின மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில், பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், பழங்குடியின மக்கள் தயாரித்த பொருட்களின் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் விழா நடைபெற்ற கம்பன் கலை அரங்கில், சுமார் 300 பேர் மட்டுமே அமரக்கூடிய அளவிற்கு நாற்காலிகள் இருந்தது. இதனால் கூடுதலாக நாற்காலிகள் போட்டு பழங்குடியின மக்கள் அமர வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: தீபாவளி அன்று போதையில் காவலரைத் தாக்கிய நபர் கைது.. மேலும் ஒருவருக்கு வலை வீச்சு!
இருப்பினும், ஒரு சில பழங்குடியின மக்கள் தரையில் அமர வைக்கப்பட்டதால், பரபரப்பான சூழல் நிலவியது. அதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் வல்லவன், அம்மக்களை நாற்காலியில் அமருமாறு கூறியுள்ளார். அதை ஏற்க மறுத்த மக்கள் தங்களைத் தரையில் அமர வைத்தது குறித்து கேள்வி எழுப்பினர்.
பின்னர் கடந்த 15 ஆண்டு காலமாக தங்களது கோரிக்கை தீர்க்கப்படவில்லை என்றும், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த உதவிகள் செய்யவில்லை என்றும், பழங்குடியினர் தின விழா மேடையில், ஒரு பழங்குடியின மக்களைக் கூட அமர வைக்காதது ஏன் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதனை அடுத்து விழாவில் கலந்துகொண்ட துணை நிலை ஆளுநர் மற்றும் முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர் வல்லவன் மற்றும் துறை சார்ந்த இயக்குநர் சாய் இளங்கோவனை அழைத்து, பழங்குடியின மக்கள் தரையில் அமர்த்தப்பட்டதன் காரணம் குறித்து விளக்கம் கேட்டனர்.
இதையும் படிங்க: "அன்று சிரித்தேன்.. இன்று பெருமைப்படுகிறேன்..." கோலி குறித்து சச்சின் உதிர்த்த வார்த்தைகள்!