வயநாடு: பழங்குடியின சகோதர சகோதரிகள் தான் இந்த நாட்டின் உண்மையான உரிமையாளர்கள். மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி, பழங்குடி இன சமூக மக்களை கட்டுப்படுத்த முயற்சிப்பதாகவும், பழங்குடியின மக்களை, ஆதிவாசி என்று அழைப்பதற்குப் பதிலாக, வனவாசி என்று குறிப்பிட்டு, நிலத்தின் உண்மையான உரிமையாளர்கள் என்ற உரிமையை வழங்க மறுப்பதாக, கேரள மாநிலம் வயநாட்டில் பழங்குடி இன மக்களிடையே உரையாற்றிய ராகுல் காந்தி குறிப்பிட்டு உள்ளார்.
பறிக்கப்பட்ட எம்.பி. பதவி திரும்ப அளிக்கப்பட்ட நிலையில், ராகுல் காந்தி, தனது சொந்த தொகுதியான கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கு 2 நாட்கள் பயணமாக, சென்று உள்ளார். வயநாடு மாவட்டத்தின் மனந்தாவடி தாலுகாவின் நல்லூர்நாட் பகுதியில் அமைந்து உள்ள டாக்டர் அம்பேத்கர் நினைவு மாவட்ட புற்றுநோய் மருத்துவமனையில், புதிய மின் வசதியை துவக்கி வைத்த பின் உரையாற்றிய ராகுல் காந்தி கூறியதாவது, பழங்குடி இன மக்களை, ஆதிவாசிகள் என்று குறிப்பிடாமல், வனவாசிகள் என்று குறிப்பிடுவதையே, வக்கிரமான தர்க்கம் தான் ஆகும். நிலத்தின் உண்மையான உரிமையாளர்களான உங்களை, மத்திய அரசு கட்டுப்படுத்த முயல்கிறது. நீங்கள் இந்த காட்டைச் சேர்ந்தவர்கள், நீங்கள் இதனை விட்டு வெளியேறக் கூடாது என்பதே எனது கருத்து.
பழங்குடி இன சமூக மக்களின் வரலாறு மற்றும் அவர்களது மரபுகளை சிதைப்பது போன்றதொரு பதமாகவே, இந்த வனவாசி என்ற சொல் உள்ளது. இந்த சித்தாந்தத்தை, காங்கிரஸ் கட்சி ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. இந்த நிலத்தின் உண்மையான உரிமையாளர்களான அவர்களுக்கு, நிலம் மற்றும் காடுகளின் மீதான முழுமையான உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.
பிற மக்களுக்கு வழங்கப்படுவது போன்ற கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட வாய்ப்புகளை, பழங்குடி இன மக்களுக்கும் வழங்க வேண்டும். இன்றைய நவநாகரீக தலைமுறையினர் சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு என்ற பெயரில், காடுகளை எரித்து மாசுபடுத்தி வரும் நிலையில், ஆதிவாசிகள் மட்டுமே, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக பல ஆயிரம் ஆண்டுகள் பேசி வருவது மட்டுமல்லாது, அதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். உங்களிடம் இருந்து, நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என ராகுல் காந்தி குறிப்பிட்டு உள்ளார்.
இந்த புற்றுநோய் மருத்துவமனையில் தற்போது துவக்கி வைக்கப்பட்டு உள்ள புதிய மின் வசதியின் மூலம், இங்கு நிலவிய மின் தடை பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.இந்த திட்டத்திற்காக, எம்.பி. நிதியில் இருந்து ரூ.50 லட்சம் வழங்குவதாகவும், மருத்துவமனைக்கு கூடுதலாக ரூ.5 கோடி கிடைக்கும் . இந்த நிதி, பயனுள்ள வகையில் பயன்படுத்தப்பட உள்ளதாக ராகுல் காந்தி குறிப்பிட்டு உள்ளார்.
பழங்குடியின மக்களை, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசு, ஆதிவாசி என்று குறிப்பிடாமல், வனவாசி என்று குறிப்பிட்டு, அவர்கள் வசம் உள்ள நிலங்களை பறித்து, அதனை, தொழிலதிபர்களிடம் வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளதாக, ராகுல் காந்தி சில நாட்களுக்கு முன், ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.