திருமணத்திற்குத் தயாராகி வரும் இன்றைய தலைமுறையினர் திருமணத்தின் முக்கிய சடங்குகளைக் காட்டிலும் திருமணப் புகைப்படம், வீடியோ ஆல்பம் ஆகியவற்றிலே அதீத ஆர்வம் காட்டுகின்றனர். வித்தியாசமான தீமில் (theme) திருமண புகைப்படங்களும், வீடியோக்களும் எடுப்பது சமீபத்திய டிரெண்ட்டாக உள்ளது.
இதற்காகவே திருமணத்துக்கு முன், திருமணத்துக்குப் பின் என புதுமணத் தம்பதிகள் புகைப்படங்கள் எடுத்துக்கொள்வது தற்போது சர்வ சாதாரணமாகிவிட்டது. இப்படி இவர்கள் எடுக்கும் புகைப்படங்கள் சமுக வலைதளங்களில் வைரலாகப் பரவுகிறது.
அண்மையில் ஒரு ஜோடி விவசாய நிலத்தில் நாற்று நடுவது, ஏர் உழுவது, சகதியில் இருவரும் உருண்டு புரள்வது போன்ற தீமில் புகைப்படங்கள் எடுத்துள்ளனர். அதேபோல் கேரளாவில் திருமணத்துக்குப் பின் எடுக்கப்பட்ட போட்டோ ஆல்பத்துக்காக மணப்பெண் அரை நிர்வாண போஸ் கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இவ்வாறு வித்தியாசமான முறையில் போட்டோ ஆல்பத்தில் ஆபத்தும் நிறைந்துள்ளதை வெளிப்படுத்தும் விதமாக ஒரு சம்பவம் கர்நாடக மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
கர்நாடகா மாநிலம் மைசூரைச் சேர்ந்தவர்கள் சஷிகலா, சந்துரு. இவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்த நிலையில், வரும் நவ. 22ஆம் தேதி திருமணம் நடைபெறவிருந்தது. இச்சூழலில் இருவரும் இனிமையான நினைவுகளுக்காக திருமணத்துக்கு முந்தைய போட்டோஷூட் எடுக்க முடிவு செய்து தலாகாடு காவிரி ஆற்றுக்குச் சென்றுள்ளனர்.
போட்டோஷூட்டின் போது, அவர்கள் ஆற்றின் நடுவே ஒரு படகில் நிற்க, புகைப்படக் கலைஞர் புகைப்படத்தை எடுக்க முயற்சி செய்தபோது, நிலைதடுமாறி சஷிகலா படகிலிருந்து ஆற்றில் விழுந்துள்ளார். அவரைக் காப்பற்ற சந்துரு ஆற்றில் குதித்துள்ளார். ஆனால் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இது குறித்து தகவலறிந்த தலகாடு காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று இருவரது உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.