தந்தைகளின் ஆசையெல்லாம் தங்களது குழந்தைகளை குறைவின்றி வளர்ப்பதுதான். அவர்களுக்காக மெழுகாக உருகவும் தந்தைகள் தயங்குவதில்லை. அத்தகைய அப்பாக்களை கொண்டாடவே, ஒவ்வொரு ஆண்டும் தந்தையர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்த தினத்தில், குழந்தைகளுக்கு ஆதர்சன ஹீரோவாக இருக்கும் அப்பாக்களுக்கு என்ன பரிசளிக்கலாம் என்பது குறித்து இத்தொகுப்பில் காணலாம்.
முதலீடு செய்யுங்கள்!
தங்களது ஆசைகளை துறந்து உங்களை மகிழ்ச்சிப்படுத்திய தந்தைகளுக்கு முதலீடு குறித்து சொல்லி கொடுங்கள். அவர்களது கடைசிக் காலத்தில், பிறர் கையை எதிர்பாராத பொருளாதார மேம்பாட்டை அவர்களுக்கு அமைத்துக் கொடுங்கள்.
மருத்துவ காப்பீடு
எதிர்பாராத மருத்துவ செலவுகளுக்கு மருத்துவக் காப்பீடு கைகொடுக்கும். உங்கள் தந்தையின் வயதுக்கு ஏற்ற படி, காப்பீடு எடுப்பது அவரது இடர்மிகுந்த காலத்தில் உதவும்.
டெக்னாலஜியை அறிய செய்யுங்கள்!
உங்களுக்கு வாழ்க்கைப்பாடத்தை கற்றுத்தந்த தந்தைக்கு, தொழில்நுட்பம் குறித்து சொல்லி கொடுங்கள்.
செல்போன்களைப் பயன்படுத்தவும், ஆன்லைன் முறையில் வங்கிச் சேவையை மேற்கொள்ளவும், கட்டணங்களை ஆன்லைன் முறையில் செலுத்தவும் அவர்களுக்கு வழிகாட்டுங்கள்.
டயட் சொல்லி கொடுங்க!
குழந்தைகளுக்காகவும், குடும்பத்திற்காகவும் பாரம் சுமக்கும் தந்தைகளில் பலர், முறையான உணவு பழக்கத்தை கொண்டிருப்பதில்லை. இதனால் வயதாகும் போது அவர்களது உடல் பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும். இதை எடுத்துச் சொல்லி, அவர்களது உணவு பழக்கத்தை மாற்றுங்கள்.
அன்பின் கதகதப்பை கொடுங்கள்!
குழந்தைகளின் நலன்களுக்காக, தங்களின் இளமைக்காலத்தை தியாகம் செய்த தந்தைகள், அவர்களது முதிய வயதில் புறக்கணிப்புக்குள்ளாகுவது வாடிக்கையாகிவருகிறது.
சிலர் தங்கள் பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு கடமை முடிந்துவிட்டதாகக் கூட நினைக்கிறார்கள். ஆனால், அவர்களது தேவையெல்லாம், உங்களது அன்பின் கதகதப்புதான். அதைக் கொடுக்க தவறாதீர்கள்.
இதையும் படிங்க: 'இது தந்தையின் தாலாட்டு' - தந்தையர் தின ஸ்பெஷல்..