சண்டிகர்: வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப்-டெல்லி மற்றும் ஹரியானா-டெல்லி மாநில எல்லைகளில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலை 44 மற்றும் அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்களின் வரத்து தடைபட்டுள்ளது.
விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஒரு வாரத்திற்கும் மேலாக முர்தால் சுங்கச்சாவடியில் வாகனங்கள் வரத்து 50 விழுக்காட்டிற்கும் குறைவான வாகனங்களே செல்வதாகவும், இதனால் சுங்கக்கட்டணத்தை வெகுவாக குறைத்ததாகவும் சுங்கச்சாவடியினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலை தொடர்ந்தால், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமே மொத்த செலவுகளையும் ஏற்க வேண்டியிருக்கும். அதே நேரத்தில், குண்ட்லி மானேசர் பல்வால் அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள இழப்பை ஹரியானா மாநில தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் ஏற்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல்வேறு பகுதிகளிலிருந்து டெல்லிக்கு செல்லும் பாதைகளை மூடுவதன் மூலம் ஆயிரக்கணக்கான வாகன போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. முன்னதாக, தேசிய நெடுஞ்சாலை 44 இன் முர்தால் சுங்கச் சாவடி வழியாக சுமார் 60,000- 70,000 வாகனங்களின் வரத்தால் ரூ .50 முதல் 70 லட்ச ரூபாய் வரை வருவாய் ஈட்டப்பட்டது. ஆனால் அவை தற்போது வெறும் ரூ .15 லட்சமாக குறைந்துள்ளது.
இதுகுறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய தொழில்நுட்ப மேலாளர் ஆனந்த் தஹியா கூறுகையில், விவசாயிகள் போராட்டத்தின் காரணமாக பல்வேறு சுங்கச் சாவடிகள் குறைந்த வருவாயை ஈட்டுகின்றன. இதன் காரணமாக நாட்டின் தேசிய கருவூலம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.
இதையும் படிங்க: ஹரியானாவில் விவசாயிகளுக்கு ஆதரவாக டிராக்டரில் ஊர்வலம் வந்த மாப்பிள்ளை!