டெல்லி: மத்திய சுகாதார அமைச்சகம் புகையிலைப்பொருள்கள் விற்பனையில் இடம்பெற வேண்டிய புதிய புகைப்படம், வாசகங்கள் குறித்து இன்று (ஜூலை 29) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில்,"வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் தயாரிக்கப்படும், இறக்குமதி செய்யப்படும் அல்லது பேக்கிங் செய்யப்படும் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்யும்போது புதிய எச்சரிக்கை புகைப்படத்துடன் 'புகையிலை வலி மிகுந்த உயிரிழப்பை ஏற்படுத்தும்' என்ற வாசகங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும்.
அந்த புகைப்படம் அடுத்த ஓராண்டிற்கு பயன்பாட்டில் இருக்க வேண்டும். அதன்பின், அதாவது 2023 டிசம்பர் 1ஆம் தேதிக்குப் பிறகு விற்பனைக்கு வரும் புகையிலைப் பொருள்கள் புதிய எச்சரிக்கை புகைப்படத்துடன் 'புகையிலை பயன்படுத்துபவர்கள் இளமையிலேயே இறக்கின்றனர்' என்ற வாகசங்களுடன் இடம்பெற வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், சிகரெட் மற்றும் மற்ற புகையிலைப்பொருள்கள் (பேக்கேஜிங் மற்றும் லேபிளிங்) 2008, விதியில் திருத்தம் செய்யப்பட்டு, இந்த புதிய எச்சரிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் விடுத்துள்ளது. இந்த விதி வரும் டிசம்பர் 1ஆம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த விரிவான விளக்கம் 19 மொழிகளில் இந்த இணையதளங்களில் http://www.mohfw.gov.in மற்றும் http://ntcp.nhp.gov.in வெளியிடப்பட்டுள்ளன.
இந்த விதியை மீறி, புதிய புகைப்படம், வாசகங்கள் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டால், சம்பந்தபட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பஞ்சாப்பில் பள்ளி பேருந்து விபத்து... 2 மாணவர்கள் உயிரிழப்பு... 13 பேர் காயம்...