புதுச்சேரி, முதலியார்பேட்டை ஏ.எப்.டி மைதானத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 29 வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், ”கருணாநிதியை காப்பாற்றிய ஊர் புதுச்சேரி. மத்திய பாஜக, புதுச்சேரியில் கிரண்பேடி என்ற ஒரு ஆளுநரை நியமித்து முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசை வஞ்சித்தது. தொடர்ந்து புதுச்சேரி மக்களையும் பாஜக வஞ்சித்தது. பாஜக கூட்டணியில் ஒற்றுமை இல்லை. அங்கு யார் முதலமைச்சர் வேட்பாளர் என்றே தெரியவில்லை.
மேலும் பாஜகவினர் எனது மகள், திமுக வேட்பாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் கொண்டு மிரட்டி வருகின்றனர். இதற்கெல்லாம் திமுக அஞ்சாது. எனவே பாஜகவை எக்காலத்திலும் புதுச்சேரிக்குள் விட்டுவிடாதீர்கள். இங்கு இயற்கை வளங்கள் அதிகம் உள்ளதால் அவற்றைக் கைப்பற்ற பாஜகவினர் முயல்கின்றனர்” என்று கூறியுள்ளார்.
இந்நிகழ்வில் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம், திமுக மாநில அமைப்பாளர்கள் சிவா, சிவக்குமார், காரைக்கால் மாவட்ட அமைப்பாளர் நாஜீம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.