இடம் பெயர்ந்தார் சனி ஈஸ்வர பகவான்
தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்தார் சனி பகவான். இதனையடுத்து திருநள்ளாறு கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சனிக்கிரகம் சூரியனை சுற்றி வர மொத்தம் 30 ஆண்டுகள் ஆகும். மொத்தம் 12 ராசிகள் உள்ளதால் அந்த முப்பது ஆண்டுகளையும் 12 ராசிகளுக்கும் சராசரியாக பிரித்தால் இரண்டரை ஆண்டுகள் வரும். அப்படி ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் இருந்து அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு மற்றொரு ராசிக்கு சனி இடம் பெயர்தலையே சனிப்பெயர்ச்சி என்கிறோம்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உலகப்பிரசித்தி பெற்ற சனீஸ்வரபகவான் பரிகாரத் தலமான தர்பாரண்யேஸ்வர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சனிகிரகத்தின் அதிபதியான சனிபகவான் தனி சன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்துவருகிறார். மேலும் சனி பரிகாரம் தளங்களில் முதன்மை தளமாக இவ்வாலயம் விளங்குகிறது.
தர்ப்பை அடர்ந்து வளர்ந்திருந்த காரணத்தால், இந்தப் பகுதி தர்ப்பாரண்யம் என்று முதலில் அழைக்கப்பட்டது, பின்னர் நகவிடங்கபுரம் என்றும் பெயர்பெற்றது. இங்கு அமர்ந்து இருக்கும் ஈசனின் திருப்பெயர் தர்ப்பாரண்யேஸ்வரர். அம்பிகையின் திருப்பெயர் பிராணேஸ்வரி.
பரிகார ராசிகள்
இந்நிலையில் இந்தாண்டு சனிப்பெயர்ச்சி இன்று (டிச.27) வெகு விமர்சையாக நடைபெற்றது. தனுசு ராசியில் இருந்து மகர ராசி சனிபகவான் அதிகாலை 5.22 பெயர்ச்சி அடைந்தார். அதனைத் தொடர்ந்து சனி ஈஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து அலங்கரிக்கப்பட்டு மஹர தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
மிதுனம், கடகம், துலாம், தனுசு, மகரம், கும்பம் ஆகிய பரிகார ராசிகாரர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறயுள்ளன. இதற்காக கோயில் நிர்வாகம் சார்பில் சனிப்பெயர்ச்சி விழா (டிச.25) கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
நாராயணசாமி, தர்மபுர ஆதீனம் தரிசனம்
சனிப்பெயர்ச்சி விழாவில் சுவாமி தரிசனத்திற்காக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, தர்மபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் ஸ்ரீலஸ்ரீ கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் தரிசனம் செய்தனர். மேலும் விழாவில் கலந்துக்கொள்ள புதுச்சேரி, தமிழ்நாடு மட்டும் இன்றி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்துவருகின்றனர்.
இந்தாண்டு கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இணையதள முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மேலும் நேற்று (டிச.26) வரை தரிசனம் செய்ய கரோனா பரிசோதனை சான்றுகள் கட்டாயம் என மாவட்ட நிர்வாகம் அறிந்திருந்த நிலையில் நேற்று மாலை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து கரோனா சான்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.
கடைசி நேர இந்த அறிவிப்பால் பக்தர்களின் வருகை சற்று குறைவாகவே காணப்பட்டது. பக்தர்களைக் கண்காணிக்க 140 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அனைத்து ஏற்பாடுகளும் கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.