டெல்லி: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள்கள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அங்கு அவர் திங்கள்கிழமை (ஜன.18) இரவு 7 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமாக நடந்த இந்தச் சந்திப்பின்போது தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும் விவாதித்துள்ளனர்.
அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆயிரம் கோடி வரை நிவாரணம் கோரியதாக கூறப்படுகிறது. மேலும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெறுவது குறித்து வியூகங்கள் வகுப்பது தொடர்பாக பேசியுள்ளனர்.
இன்று பிரதமரை சந்திக்கிறார்
இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியை இன்று (ஜன.19) அவரது இல்லத்தில் சந்தித்து பேசுகிறார். அதன் பின்னர் பாஜக தலைவர்களையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்றும் மூன்று மாதமே உள்ள நிலையில் முதலமைச்சரின் டெல்லி பயணம் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
முன்னதாக டெல்லி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை டெல்லி விமான நிலையத்தில் டெல்லிக்கான தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி தளவாய் என்.சுந்தரம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் KPமுனுசாமி, நவநீதகிருஷ்ணன், முகமது ஜான், சந்திரசேகரன் ஆகியோர் மலர்கொத்து வழங்கி வரவேற்றனர்.
இதையும் படிங்க: அதிமுகவுக்கே என் ஆதரவு, மனம் திறக்கும் ரஜினி வில்லன்!