டெல்லி: மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்தார்.
இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய மம்தா, இந்த சந்திப்பு இனிமையானதாக இருந்தது. எதிர்காலத்தில் இது நல்ல விளைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கிறேன். அரசியல் சூழல் குறித்து கலந்துரையாடினோம். பெகாசஸ் விவகாரம், கரோனா சூழல், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை ஆகியவை குறித்து பேசினோம் என தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது ராகுல் காந்தி உடனிருந்தார்.
2024ஆம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் தலைமையாக நீங்கள் இருப்பீர்களா என கேள்வி எழுப்பப்பட்டதற்கு, பாஜகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டியது அவசியம். தனி நபராக எனக்கு எந்த பலமுமில்லை; அனைவரும் சேர்ந்தே பணியாற்ற வேண்டும். நான் தலைவர் அல்ல தொண்டர்; நான் மக்களோடு மக்களாக இருப்பவள் என்றார்.
பெகாசஸ் விவகாரம் குறித்த கேள்விக்கு, பெகாசஸ் விவகாரம் தொடர்பாக அரசு ஏன் வாய் திறக்க மறுக்கிறது. மக்கள் அதுகுறித்து அறிந்துகொள்ள வேண்டும். திட்ட முடிவுகள் நாடாளுமன்றத்தில் எடுக்கப்படவில்லை என்றால், வேறு எங்கு எடுக்கப்படுகிறது. இது டீக்கடையில் எடுக்கும் முடிவல்ல, நாடாளுமன்றத்தில் எடுக்கப்பட வேண்டிய முடிவு என்றார்.
டெல்லிக்கு ஐந்து நாள் பயணம் மேற்கொண்டுள்ள மம்தா, எதிர்க்கட்சி தலைவர்கள் பலரை சந்தித்து வருகிறார். காங்கிரஸ் எம்பி ஆனந்த் ஷர்மா, மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் ஆகியோரை முன்னதாக சந்தித்தார்.
இதையும் படிங்க: பெகாஸஸை ஒன்றிய அரசு வாங்கியதா? இல்லையா? - ராகுல் கேள்வி