மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுவேந்து அதிகாரி அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார். முன்னதாக, அமைச்சரவையிலிருந்து விலகிய அவர், தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை நேற்று (டிசம்பர் 17) ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, அவர் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே, சுவேந்து அதிகாரி கட்சி தலைமையுடன் மாற்று கருத்து கொண்டிருந்தார். கட்சியின் முக்கிய கூட்டங்களில் கலந்துகொள்ளாமல் தவிர்த்து வந்தார். இந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மேற்குவங்கம் செல்லவுள்ளார். அப்போது, அவரது முன்னிலையில் சுவேந்து அதிகாரி பாஜகவில் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது.
விக்கெட்டை இழந்த திரிணாமுல் காங்கிரஸ்
செல்வாக்கு மிக்க அவரை கட்சியில் வைத்துக்கொள்ள திரிணாமுல் சார்பில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவர் கட்சியிலிருந்து விலகியுள்ளதால் அடுத்தாண்டு தேர்தலில் குறைந்தபட்சம் 50 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அசன்சோல் தொகுதி எம்எல்ஏ ராஜினாமா
இதற்கிடையே, அசன்சோல் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஜிதேந்திர திவாரி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிருந்து விலகியுள்ளார். முன்னதாக, அவர் சுவேந்து அதிகாரியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.