டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. விலைவாசி உயர்வு, எரிபொருள்களின் விலை உயர்வு, ஜிஎஸ்டி வரி பிரச்சனை போன்றவற்றை முன்வைத்து எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடும் அமளிக்கு பின் மதியம் கூடிய மக்களவையில், திரிணாமுல் கட்சியை சேர்ந்த எம்.பி., ஒருவர் விநோதமான முறையில் ஆளும் பாஜகவுக்கு எதிரிப்பு தெரிவித்துள்ளார்.
கத்திரிக்காயை கடித்த காரணம்...: மக்களவையின் விவாதத்தின்போது, திரிணாமுல் மக்களவை உறுப்பினரான ககோலி கோஷ் தஸ்திதார்,"தற்போது, கிராமத்தில் வாழும் லட்சக்கணக்கான பெண்கள், மீண்டும் தங்களின் பாரம்பரிய முறைப்படியே சமைக்க தொடங்கிவிட்டனர். ஏனென்றால், உஜ்வாலா திட்டம் மூலம் சிலிண்டர் வாங்கிய அவர்களால் அதை மீண்டும் பயன்படுத்த தேவையான பணம் இல்லை.
விலை உயர்வு காரணமாக லட்சக்கணக்கான சிலிண்டர்கள் தற்போது காலியாக உள்ளன. சிலசமயம் எனக்கு ஆச்சரியமாக இருக்கும், இந்த அரசு நமது உணவை பச்சையாக உண்ண சொல்கிறதோ என்று..." என கூறியவாறே தனது கையில் இருந்த பச்சையான கத்திரிக்கையை எடுத்து கடித்தார். இச்செயல் அவையில் நல்ல வரவேற்பை பெற்றது.
அமைச்சர் மீது மறைமுக தாக்கு: தொடர்ந்து பேசிய ககோலி,"எல்பிஜி சிலிண்டரின் விலை கடந்த சில மாதங்களில் மட்டும் நான்கு முறை உயர்ந்துள்ளது. மூன்று, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, 600 ரூபாயாக இருந்த சிலிண்டர், இன்று 1,100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு ஏழை எப்படி 1,100 ரூபாய் கொடுத்து, ஒரு சிலிண்டரை வாங்குவார்?. இதுகுறித்து அரசு ஆலோசனை செய்து, விலையை குறைக்க வேண்டும்.
தற்போதைய பெண் அமைச்சர் ஒருவர் இதற்கு முன்பு, எரிபொருள் உயர்வுக்காக கடுமையாக குரல் கொடுத்தார். ஆனால், அவர்கள் அதிகாரத்திற்கு வந்தவுடனேயே அதுகுறித்து மறந்துவிட்டார். முன்பு விலைவாசி உயர்வை கண்டிப்பதாகக் கூறி தலையில் சிலிண்டரை தூக்கிவைத்து போராட்டம் நடத்தினார். அவர் இங்கு இல்லை, அவரின் பெயரை சொல்ல விரும்பவில்லை..." என்றார்.
தற்போது மத்திய அமைச்சராக உள்ள ஸ்மிருதி இரானி, காங்கிரஸ் ஆட்சியின்போது விலைவாசி உயர்வை கண்டிக்கும் வகையில் தலையில் சிலிண்டரை வைத்து சாலையில் போராட்டம் நடத்தியதை ககோலிகா மறைமுகமாக கூறகிறார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: வறுமை... தாயின் உடலை 80 கி.மீ. பைக்கில் கொண்டு சென்ற மகன்...