கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் மார்ச் 27ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில் வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரும் தற்போதைய எம்எல்ஏவுமான ஜோத்ஸ்னா மண்டியின் சொத்து கடந்த 5 ஆண்டில் 2 ஆயிரம் விழுக்காடு அதிகரித்துள்ளது. அதாவது 2016இல் ரூ.1,96,633 ஆக இருந்த இவரது சொத்து மதிப்பு 2021இல் ரூ.41,01,144 ஆக அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 5 ஆண்டில் 1985.68 விழுக்காடு அதிகரித்துள்ளது.
ஜோத்ஸ்னா மண்டி பங்குரா மாவட்டத்தில் உள்ள ராணிபந்த் தொகுதியில் போட்டியிடுகிறார். இது பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட தனித்தொகுதியாகும். இதேபோல் பாஜக வேட்பாளர் சுதீப் குமார் முகர்ஜியின் சொத்து மதிப்பும் 288.86 விழுக்காடு அதிகரித்துள்ளது. இவர் 2016இல் புரூலியா சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். தற்போது காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார்.
முகர்ஜியின் சொத்து கடந்த 5 ஆண்டுகளில் ரூ.11,57,945இல் இருந்து ரூ.45,02,782 ஆக அதிகரித்துள்ளது. மேலும், திரிணாமுல் காங்கிரஸின் மற்றொரு பழங்குடி தனித்தொகுதி எம்எல்ஏ பரேஷ் முர்முவின் சொத்து மதிப்பு 246.34 விழுக்காடு அதிகரித்து ரூ.11,57,926 ஆக உள்ளது. மாறாக ஜெயந்த்நகர் (பட்டியலின தொகுதி) எம்எல்ஏ பிஸ்வநாத் தாஸின் சொத்து மதிப்பு 69 விழுக்காடு குறைந்து ரூ.14 லட்சத்து 41 ஆயிரத்து 200 ஆக உள்ளது.