அகர்தலா: திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய வடகிழக்கு மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் முதற்கட்டமாக திரிபுரா மாநிலத்தில் உள்ள 60 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று (பிப்.16) ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. 28.13 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்தலில் 259 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 18 பேர் பெண்கள் ஆவர். 58 பேர் சுயேச்சையாக போட்டியிடுகின்றனர்.
மொத்தம் 3,328 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், 1,128 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர். முதலமைச்சர் மாணிக் சாகா, முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான மாணிக் சர்க்கார் உள்ளிட்டோரும் வாக்களித்தனர்.
பிற்பகல் 1 மணி நிலவரப்படி, 51.35 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. திரிபுராவை பொறுத்தவரை பாஜக-திரிபுரா மக்கள் முன்னணி, காங்கிரஸ்-இடதுசாரிகள் மற்றும் திப்ரா மோத்தா ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது. மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடையும் நிலையில், மார்ச் 2ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகிறது.