மொரேனா: மத்திய பிரதேசம் - ராஜஸ்தான் மாநில எல்லையில் அமைந்துள்ள கரவ்லி பகுதியில், பிரசித்தி பெற்ற கைலா தேவி கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சைத்ரா நவராத்திரியை முன்னிட்டு இக்கோயிலில் லக்கி மேளா என்ற திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்தாண்டுக்கான விழா நாளை (மார்ச் 19) தொடங்க உள்ள நிலையில், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்து செல்கின்றனர்.
இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்டம் சிலாய்சவுன் பகுதியை சேர்ந்த 17 பேர், பாதயாத்திரையாக கைலா தேவி கோயிலுக்கு சென்றனர். இக்கோயிலுக்கு சாம்பல் ஆற்றை கடந்து செல்ல வேண்டும் என்பதால், 17 பேரும் படகில் பயணம் செய்தனர். அப்போது எதிர்பாராத விதமாக படகு ஆற்றில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர். 8 பேர் பத்திரமாக நீந்தி கரை சேர்ந்தனர். எஞ்சியவர்கள் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் நீச்சல் வீரர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த நீச்சல் வீரர்கள், நீரில் மூழ்கிய பெண் உட்பட 3 பேரை சடலமாக மீட்டனர். மூன்று பேரின் சடலங்களும், உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் நீரில் மூழ்கி மாயமான 6 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், மீட்புப் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளார். மீட்பு பணிகள் குறித்து மொரேனா மாவட்ட ஆட்சியர் அஸ்தனா கூறுகையில், "சாம்பல் ஆற்றில் படகில் சென்ற போது படகு கவிழ்ந்ததில் 17 பேர் நீரில் மூழ்கியிருக்கின்றனர். 8 பேர் கரை திரும்பிய நிலையில், 3 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இப்பணியில் நீச்சல் வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்." என்றார்.
கோயிலுக்கு சென்ற போது படகு கவிழ்ந்து 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.