பனாஜி: ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த நடிகையும், பாஜக மகளிரணி நிர்வாகியுமான சோனாலி போகத் (42) கோவாவில் கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், அவரது உதவியாளர்கள் இருவரை கைது செய்தனர்.
சோனாலி அதிகளவு போதைப்பொருள் எடுத்துக்கொண்டதாக உடற்கூராய்வில் தெரியவந்தது. இந்த மரணம் தொடர்பாக நேற்று(ஆக.27) மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். சோனாலி மரண வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிடும்படி கோவா அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஹரியானா முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் கூறியிருந்தார்.
இந்த நிலையில், தேவைப்பட்டால் சோனாலி போகத் மரண வழக்கு விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் என கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். பனாஜியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சாவந்த், "இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என சோனாலியின் குடும்பத்தினர் விரும்புகின்றனர். சிபிஐயிடம் ஒப்படைப்பதில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. கோவா காவல்துறை இந்த வழக்கை முழு ஈடுபாட்டோடு விசாரித்து வருகிறது. தேவைப்பட்டால் வழக்கை சிபிஐக்கு மாற்றுவோம்" என்று கூறினார்.